இன்று முழு ஊரடங்கு: அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி!
கேரளாவில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், அத்தியாவசிய பணிகளுக்கான சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்தத்து. இதையடுத்து, பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றன. அந்த வகையில், கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் உள்பட 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் விகிதம் 50 சதவீதத்தை கடந்ததால் தியேட்டர்கள் நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கடந்த 23ஆம் தேதி கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஜனவரி 31ஆம் தேதி (இன்று) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.
அதன்படி, கேரளாவில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், அத்தியாவசிய பணிகளுக்கான சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து உள்பட அனைத்து போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை. ஹோட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், பத்திரிகை, பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு தடை இல்லை. விமான நிலையங்கள், ரயில் நிலையங்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் மட்டும் இயக்கப்படும்.
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. கடந்த 7 நாட்களில் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 94 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment