நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்!
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 32 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 52 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு மட்டும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவைகள் இன்னும் முடிவடையாததால், வேட்மனுத் தாக்கலில் சுணக்கம் காணப்படுகிறது. இதனிடையே, தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர்கள் பார்வையிட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பறக்கும் படையினர் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பொருட்களையும், பணத்தையும் கைப்பற்றி வருகிறார்கள். நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 32 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 52 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் நடக்க இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 49 ஐஏஎஸ் அதிகாரிகளை பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிடுகிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக 60 ஐஏஎஸ் அதிகாரிகளின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் செய்யப்பட்ட 49 ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட பட்டியலில், 36 பேர் இந்திய தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் காணப்படுகின்றனர்.
எனவே மீதமுள்ள 13 ஐஏஎஸ் அதிகாரிகளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பார்வையாளர்களாக பயன்படுத்த முடியும். அவர்கள் தவிர மேலும் 19 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் (டி.ஆர்.ஓ.) ஆகியோரை மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி, “சி.என்.மகேஸ்வரன், வி.தட்சிணாமூர்த்தி, எம்.லட்சுமி, அஜய் யாதவ் (இளையவர்), எல்.நிர்மல்ராஜ், எம்.கோவிந்த ராவ், ஏ.ஜான் லூயிஸ், மகேஸ்வரி ரவிக்குமார், டி.ரத்னா, ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், எஸ்.வளர்மதி, எம்.பிரதீர்குமார், கே.கற்பகம் ஆகிய 13 பேரை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கலாம்.
மேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் பி.பிரியங்கா, எஸ்.அருண்ராஜ், கே.சாந்தி, எம்.எஸ்.சங்கீதா, பி.கணேசன், ஆர்.பிருந்தா தேவி, வந்தனா கார்க், ஜே.இ.பத்மஜா, ஆனந்த் மோகன், நிஷாந்த் கிருஷ்ணா, வி.சிவகிருஷ்ணமூர்த்தி, எஸ்.பாலச்சந்தர், ஆர்.வைத்தியநாதன், எம்.பிரதாப், கே.ஜே.பிரவீன்குமார், எல்.மதுபாலன், எம்.என்.பூங்கொடி, எம்.தங்கவேல், ஏ.சங்கர் ஆகிய 19 பேரையும், வி.ஆர்.சுபலட்சுமி, பி.ரத்னசாமி, ஆர்.சதீஷ், எஸ்.கவிதா, ஆர்.ரேவதி, ஆர்.பிரியா, எம்.இந்துமதி, என்.காளிதாஸ், எஸ்.சாந்தி, எஸ்.முத்துமாரி, சி.ஜெயஸ்ரீ, வி.மீனாட்சி சுந்தரம், வி.மங்களம், வி.ரவிச்சந்திரன், எஸ்.ஜானகி, பி.வி.சரவணன், சி.ராஜேந்திரன், ஜி.சரவணமூர்த்தி, ஜி.சிவருத்ரயா, ஆர்.சக்திவேல் ஆகிய 20 மாவட்ட வருவாய் அதிகாரிகளையும் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தலாம்.” என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment