இந்தியாவில் அதிகரிக்கும் ஏழை மக்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!
2021ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏழை மக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
பொருளாதார சமநிலையின்மை என்பது இந்தியாவில் நீண்ட காலமாகவே இருக்கும் பிரச்சினையாகும். ஒருபுறம் ஏழை இன்னும் ஏழையாகிறான்; இன்னொரு புறம் பணக்காரன் இன்னும் பணக்காரனாகிறான். வறுமை ஒழிப்புக்காக நிறைய திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வந்தாலும் இதில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவே தெரியவில்லை. அதற்குச் சான்றாக ஆக்ஸ்ஃபம் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான அறிக்கை இது.
2021ஆம் ஆண்டில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் ஏழை மக்களின் நிலை இன்னும் மோசமாகியுள்ளது. அதேநேரம், பில்லியன் கணக்கில் சொத்து சேர்க்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ”Inequality Kills” - அதாவது ”சமத்துவமின்மை கொல்கிறது” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த ஆய்வறிக்கையில், 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை 102லிருந்து 142 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டில் மட்டும் புதிதாக 40 பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். அதேநேரம், இந்தியாவில் உள்ள சுமார் 81 சதவீத குடும்பங்களின் வருமானம் சென்ற ஆண்டில் குறைந்திருப்பதாகவும் இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பில்லியனர்களின் எண்ணிக்கை அடிப்படையில், சர்வதேச அளவில் சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் கௌதம் அதானியின் சொத்து மதிப்புதான் அதிகளவு உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில் சர்வதேச அளவில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார்.சென்ற ஆண்டில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், சுகாதாரப் பாதுகாப்புச் செலவுகளை இந்திய அரசு 10 சதவீதம் குறைத்துவிட்டதாகவும், கல்விக்கான செலவுகளை 6 சதவீதம் குறைத்ததாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 15 சதவீதம் உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment