முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த சிக்ஸர்.. குவியும் வாழ்த்துகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 26, 2022

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த சிக்ஸர்.. குவியும் வாழ்த்துகள்!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த சிக்ஸர்.. குவியும் வாழ்த்துகள்!


சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பை தொடங்கவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
AIBCF, SRA, PAGAAM, BAMCEF, We The People மற்றும் LEAD INDIA ஆகிய அமைப்புகள் இணைந்து “சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம்” என்ற தலைப்பிலான தேசிய இணையக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் மகாராஷ்டிரா மாநில உணவு, நுகர்பொருள் வாணிபம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷகன் சந்திரகாந்த் புஜ்பால், ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஆதிமுலப்பு சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி. வில்சன், டெரிக் ஓ பிரையன், மனோஜ் குமார் ஜா, ஈ.டி. முகம்மது பஷீர், அலாகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் வீரேந்திர சிங் யாதவ், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, PAGAAM நிறுவனர் சர்தார் தஜிந்தர் சிங் ஜல்லி, BAMCEF நிறுவனர் பி.டி. போர்க்கர், LEAD அமைப்பின் தலைவர் (அமெரிக்கா) டாக்டர் ஹரி எப்பனபள்ளி, AIBF ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளர் நீதியரசர் வி. ஈஸ்வரய்யா ஆகியோர் கலந்து கொண்டு, மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்த முயற்சிகளைப் பாராட்டி உரையாற்றினர்.

இதன்பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய தலைமையுரையில், “எங்கெல்லாம் அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று உலகப் பொருளாதார மேதை அமர்த்தியா சென் சொல்லியிருக்கிறார். அத்தகைய நீதியை உருவாக்கவே திராவிட இயக்கம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.இரத்த பேதம் இல்லை - பால் பேதம் இல்லை என்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியம். சமூகநீதியும் - பெண்ணுரிமையும்தான் தலையாய இலட்சியம். இந்த மகத்தான கொள்கையைத் தமிழத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்கும் பணியை நாங்கள் தொடங்க இருக்கிறோம்.

சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டிருக்கிறேன். சமூக நீதி குறித்து அக்கறை கொண்ட அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் தலைவர்கள் அதில் பங்கேற்பார்கள். சமூக நீதி சார்ந்த சட்டங்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற இந்த கூட்டமைப்பு விரைவான பரிந்துரைகளை வழங்கும்.ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விகிதாச்சாரம் மாறுபடலாம். ஆனால் சமூக நீதி கொள்கை ஒன்றுதான். எல்லாருக்கும் எல்லாமும் என்பதே இந்தக் கூட்டமைப்பின் அடித்தளம். கூட்டாட்சி இலக்கை அடைய இந்த கூட்டமைப்பு செயல்படும். நாம் அடிக்கடி சந்தித்து சமூக நீதியை உயர்த்திப்பிடிப்போம்” என்று பேசினார்.

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதிசெய்ததற்காக ஏற்கெனவே வட இந்திய தலைவர்களும், சமூக நீதி செயற்பாட்டாளர்களும் ஸ்டாலினை பாராட்டினர். குறிப்பாக ஓபிசி பிரிவினரிடையே ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில், சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பை தொடங்கவிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளதற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad