வரலாற்றில் இன்று: ஒரு வெற்றிக்காக 20 வருசம் காத்திருந்த இந்திய அணி… சரித்திரம் படைத்த தினம்!
இந்திய டெஸ்ட் அணி சரித்திரம் படைத்த தினம் இன்று.
இந்திய டெஸ்ட் அணி 1932ஆம் ஆண்டுமுதல் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் 20 வருடங்களில் 25 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, ஒரு வெற்றியைக் கூடப் பெறவில்லை.
இந்நிலையில் 26ஆவது டெஸ்ட் போட்டி, 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6 முதல் 10ஆம் தேதிவரை சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டிக் ஸ்பூனர் (66), ஜாக் ராபர்ட்சன் (77), டொனால்ட் கேர் (40) ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார்கள். இதனால், அந்த அணியால் முதல் இன்னிங்ஸில் 266/10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த தரப்பில் வினோ மன்கட் 8/55 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.இந்திய இன்னிங்ஸ்:
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர் பங்கஜ் ராய் (111), கேப்டன் விஜய் ஹசாரே (130) இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்கள். அடுத்து தட்டு பாட்கர் தனது பங்கிற்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில், மற்றவர்கள் 20+ ரன்கள் அடித்திருந்தார்கள். இதனால், இந்திய அணி 457/9 ரன்கள் குவித்து டிக்ளேர் அறிவித்தது.இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸ்:
இதனைத் தொடர்ந்து 191 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜாக் ராபர்ட்சன் (56), ஆலன் வாட்கின்ஸ் (48) ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்ததால், இங்கிலாந்து அணி 183/10 ரன்கள் மட்டும் சேர்த்து, இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
வினோ மன்கட், குலாம் அகமது ஆகியோர் தலா நான்கு விக்கெட்களை கைப்பற்றி அசத்தியிருந்தார்கள். இதுதான் இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றியாகும். இப்போட்டியில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த கேப்டன் விஜய் ஹசாரேவை கௌரவப்படுத்தும் விதமாகத்தான், இந்திய உள்ளூர் ஒருநாள் தொடருக்கு விஜய் ஹசாரேவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment