இன்னும் 27 அமாவாசையில் இது நடக்கும்.. ஸ்டாலினுக்கு எடப்பாடி சொன்ன ஜோசியம்!
ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது பாஜகவினரையே ஓவர்டேக் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்து எதிர்கட்சி வரிசையில் உட்கார்ந்தது அதிமுக. பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த அக்கட்சி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து களம் கண்டது. மோசமான தோல்வி இல்லை எனினும் ஆட்சி கைவிட்டு போனநிலையில் நிர்வாகிகளை தன்பக்கம் தக்கவைக்க அப்போதே எடப்பாடி பழனிசாமி ஒரு விஷயத்தை சொன்னார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய சில நாள்கள் சேலத்திலேயே தங்கியிருந்த அவர் தன்னை பார்க்க வரும் நிர்வாகிகளிடம் “தைரியமா இருங்க, அடுத்த சட்டமன்ற பொதுத் தேர்தல் அஞ்சு வருஷம் கழிச்சுதான்னு ரிலாக்ஸா இருந்துடாதீங்க.. டெல்லியில இருந்து எனக்கு தகவல் வந்துருக்கு.. மக்களவைத் தேர்தலோட சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வரப்போகுதாம்.. அதனால 2024ல தேர்தல் வந்துரும்..” என பேசியதாக அப்போதே தகவல்கள் வந்தன.
தனிப்பட்ட முறையில் அவர் பேசிவந்ததை தற்போது ஊர் ஊராக மேடை போட்டு பேசிவருகிறார். அவருடன் சேர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் இதே கருத்தை செல்லும் இடமெல்லாம் பேசி வருகிறார்.
திருச்சி மாவட்ட அதிமுக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்ட ஓபிஎஸ், “இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அப்போது நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டமன்றத் தேர்தலும் நடக்கும் . அதற்கான அச்சாரமாக தான் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இருக்கும்” என்று பேசியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கின்ற விதத்தில் 2024ஆம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும். ஆகையால் 27 அமாவாசை தான் இந்த ஆட்சி, ஆகவே ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும். ஆகையால், காவல்துறை நேர்மையாகச் செயல்பட வேண்டும். அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது எதற்காக, மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டுமே, ஆனால் தற்போது உள்ள அமைச்சர்கள் எப்படிக் கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது என்று ஆலோசிப்பது தான் இவர்களது வேலையா? இதில் திறமை வாய்ந்தவர் கரூரில் உள்ளவர். செந்தில் பாலாஜி தலைமேல் கத்தி தொங்குகின்றது” என்று பேசியுள்ளார்.இது குறித்து அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம். “ஓபிஎஸ், இபிஎஸ் சொல்வது போல ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து பிரதமர் மோடியும் அவ்வப்போது பேசி வருகிறார். மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் இணக்கமாக செல்லும் பிராந்திய கட்சிகள் சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய கட்சிகளை கண்டு கொள்வதில்லை. ஒரே நேரத்தில் தேர்தல் வந்தால் தங்களுக்கான முக்கியத்துவம் அதிகம் இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கலாம்.பாஜகவின் நீண்டகால செயல் திட்டங்களில் அதுவும் ஒன்று. ஆனால் இரண்டு ஆண்டுகளில் அது நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவும் மோடியும் பிஸியாக இருக்கும் போது, ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பொதுத் தேர்தல் என சொல்வது முரணாக உள்ளது. கூட்டணி முறிந்தாலும் இப்போதும் பாஜகவை ஒரு படி மேலே போய் அவர்கள் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆர்வமாக இருப்பதையே இது காட்டுகிறது” என்று கூறுகின்றனர்.
No comments:
Post a Comment