3 கேஸ் சிலிண்டர் இலவசம்.. பென்சன் உயர்வு.. பாஜக தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது?
கோவாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எல்லா குடும்பங்களுக்கும் 3 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
கோவா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் கோவாவின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவா மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், கோவா பாஜக தலைவர் சதானந்த், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில், எல்லா குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும், அடுத்த 10 ஆண்டுகளில் கோவா பொருளாதாரம் மேம்படுத்தப்படும் எனவும், அனைவருக்கும் வீட்டு வசதி செய்துதரப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல அடுக்குகளில் உள்ள வறுமை முழுவதுமாக ஒழிக்கப்படும் எனவும் பாஜக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முதியோருக்கு வழங்கப்படும் பென்சன் தொகை மாதத்துக்கு 3000 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.கோவா மாநிலம் சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்திருக்கிறது. எனவே, சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. கோவாவில் பிப்ரவரி 14ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment