வாரிசு சான்று வழங்க லஞ்சம்... வருவாய் துறை அலுவலருக்கு 3 ஆண்டு சிறை!
ஈரோட்டில் வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட அந்தியூர் அருகே உள்ள நகலூரை சேர்ந்தவர் கருப்பணன் (60). இவர் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கேட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி விண்ணப்பித்தார்.
அப்போது அங்கு வருவாய்த்துறை உதவியாளராக இருந்த ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ஜெயராஜ் (40), அலுவலக உதவியாளரான நகலூரை சேர்ந்த செல்வராஜ் (57) ஆகியோர் வாரிசு சான்றிதழ் வழங்க ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.
அவ்வளவு தொகையை வழங்க முடியாது என மறுத்ததால் பேரம் பேசி 4500 ரூபாய் கொடுத்தால் தான் சான்று வழங்க முடியும் என ஜெயராஜ், செல்வராஜ் ஆகியோர் கூறினர். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பணன் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் கூறிய அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயராஜ், செல்வராஜ் ஆகியோரிடம் கருப்பணன் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கொடுத்து உள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயராஜ், செல்வராஜ்
ஆகிய 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும், அவர்கள் மீது ஈரோடு தலைமை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனிடையே, வழக்கின் புகார்தாரரான கருப்பணன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.குற்றம்சாட்டப்பட்ட செல்வராஜ் கடந்த 2020-ம் ஆண்டு இறந்தார். இந்தநிலையில் வழக்கை விசாரித்து வந்த ஈரோடு தலைமை நீதிபதி புஷ்பராணி நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட ஜெயராஜூக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
No comments:
Post a Comment