ஜஸ்ட் மிஸ் ஆயிருக்கோம்... 500 கிலோ கஞ்சா... 5 கோடி ரூபாய் மதிப்பாம்... நாகையில் நிகழ்ந்த அதிர்ச்சி..!
இலங்கைக்கு படகு மூலம் கடத்தவிருந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ கஞ்சா நாகையில் பறிமுதல்.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்று இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தவிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகை தனிப்படை போலீசார், நாகை துறைமுகம், வேதாரண்யம் கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கண்காணிப்பை பலப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்றிரவு நாகை துறைமுகம் அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த இரு கார், ஒரு லோடு வேனை மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் வந்த 6 நபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து சந்தேகமடைந்த தனிப்படை போலீசார், லோடு வேனையும், காரையும் சோதனையிட்டனர் அப்போது லோடு வேனில் தவிடு மூட்டைக்கு அடியில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட, நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர் சிங்காரவேல், சீர்காழி மற்றும் தேனியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன், மணிவாசகம், சந்திரசேகர், உமாபதி, ஸ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்களும், ஒரு லோடு வேனும், பைபர் படகு ஒன்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆந்திர மாநிலம் இருந்து இந்த கஞ்சா பொட்டலங்கள் லோடு வேன் மூலம் நாகை துறைமுகத்திற்கு கடத்தி வரப்பட்டதாகவும், பின்னர் படகு மூலம் இலங்கைக்கு அதனை கடத்திச் செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.
பிடிபட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு 5, கோடி ரூபாய்க்கு மேல் இருக்குமென்றும் மேலும் இதுதொடர்பாக கஞ்சா கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் தெரிவித்துள்ளார். நாகையில் தொடர்ந்து பல கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல் செய்து வருவது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
No comments:
Post a Comment