குறிவைத்து காத்திருந்த சசிகலா: கிடைத்தது டெல்லி க்ரீன் சிக்னல்!
சசிகலாவுக்கு டெல்லியில் ஆதரவு அலை தற்போது உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வெளியே வந்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் எவ்வளவு தூரம் சசிகலா முன்னேறியிருக்கிறார் என்று கேட்டால் பெரிய கேள்விக் குறியே மிஞ்சியது.
அதிமுக கீழ்மட்ட நிர்வாகிகள், சசிகலா குடும்பத்தால் ஆதாயம் பெற்றவர்கள் என பலரை தன் பக்கம் இழுத்து அதன் மூலம் அதிமுக இரட்டைத் தலைமைக்கு அதிர்ச்சியளிக்கலாம் என சசிகலா திட்டமிட்டார். அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தங்களது பதவிகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டி சசிகலாவை நோக்கி அவர் பட்டியலிட்டு வைத்த நிர்வாகிகள் வரவில்லை. இதனால் அதிமுகவின் இரட்டை தலைமை குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அசைந்து கொடுக்கவே இல்லை.
இந்த வழியில் பயணம் செய்தால் கட்டாயம் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை எந்த பலனும் இருக்காது என்பதை உணர்ந்த சசிகலா தனது பாணியை மாற்றியுள்ளார். அந்த வகையில் அதிமுகவை அதன் இரட்டை தலைமையை ஆட்டுவிக்கிற பாஜகவின் கடைக்கண் பார்வை தன் மீது பட்டால் மட்டுமே மாற்றம் நிகழும் என நம்புகிறாராம்.எனவே பாஜகவின் டெல்லி தலைமையிடம் தனது நிலைப்பாட்டை எப்படி சொல்வது என ஆள் பார்த்தும் நாள் பார்த்தும் வந்தார். அந்த வகையில் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக சொல்கிறார்கள். அதற்கான சமிக்ஞையே விஜயசாந்தி சசிகலாவை சந்தித்தது என்கிறார்கள்.
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை கையிலெடுத்த பாஜக விஜயசாந்தி உட்பட சிலரை விசாரிக்கச் சொல்லியிருந்தது. அப்போது அவர்களில் நடிகை விஜயசாந்தி மட்டும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார். டெல்லி கொடுத்த க்ரீன் சிக்னல் காரணமாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறுகிறார்கள்.சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வருவது மட்டுமல்லாமல் அவரது தலைமையில் இணைப்பை நிகழ்த்த விஜயசாந்தி மூலம் தகவல் சென்றுள்ளது. அதிமுகவின் சமீபத்திய
பல சறுக்கல்களுக்கான காரணம், இணைப்பின் மூலம் என்னென்ன நன்மைகள் பாஜகவுக்கு ஏற்படும், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்து அதன் மூலம் கணிசமான இடங்களை எப்படி பெறுவது என்பது குறித்து விஜயசாந்தி டெல்லிக்கு சொல்லியுள்ளதாக கூறுகிறார்கள்.
பெங்களூர் சிறை வழக்கு ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் விஜயசாந்தி மூலம் முக்கிய தகவல்கள் பரிமாறப்பட்டதால் சசிகலா ஹேப்பி மூடில் இருப்பதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
No comments:
Post a Comment