என்னது ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்துவதா? -ஐகோர்ட் காட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 15, 2022

என்னது ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்துவதா? -ஐகோர்ட் காட்டம்!

என்னது ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்துவதா? -ஐகோர்ட் காட்டம்!ஆக்கிரமிப்புகள் வரன்முறைபடுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம், பெத்தேல்நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த 2015, 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இதுவரை 2 ஆயிரம் 839 ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்களை தொகுத்து தாக்கல் செய்துள்ளதாகவும், அடுத்தகட்டமாக இது அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று இடம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்த சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2015ம் ஆண்டு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தபோது 111 ஆக்கிரமிப்புகளே இருந்துள்ளன என்றும், 30 ஆயிரம் பேர் வசிப்பதாக தற்போது கூறுவது தவறான புள்ளி விபரங்கள் எனவும் தெரிவித்தார்.

பெத்தேல்நகர் குடியிருப்போர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், 25 ஆண்டுகளுக்கும் மேல் வசித்துவரும் 30 ஆயிரம் மக்களை ஒரே இரவில் அப்புறப்படுத்தக் கூடாது எனவும், புதிய இடத்துக்கு மாறுவதில் சிக்கல்கள் உள்ளன என்றார்.

அரசு மாற்று இடத்தில் குடியமர்த்தும் நடவடிக்கையை ஏற்று, ஆக்கிரமிப்பு நிலத்தை காலி செய்வதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக தனிப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களின் கருத்துக்களை பெற்று தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.

ஆனால், ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்த அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், அப்படி வரன்முறைப்படுத்த அனுமதித்தால், அது ஆக்கிரமிப்புகளை ஊக்குவிப்பதைப் போன்றது எனத் தெரிவித்தனர்.

தற்போது மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல் நிலங்களாக இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளே வெள்ளத்துக்கும், மழையில்லா காலங்களில் தண்ணீர் பஞ்சத்துக்கும் காரணமாகின்றன எனக் குறிப்பிட்டனர்.

அதிக நீர்நிலைகளைக் கொண்ட ஆசிர்வதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம் எனக் கூறிய நீதிபதிகள், தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என திட்டமிட்டு, ஒவ்வொரு கோவிலிலும் குளங்கள் கட்டப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பாளர்களை மாற்று இடத்தில் குடியமர்த்துவது கூட மறைமுகமாக் ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது எனக் கூறிய நீதிபதிகள், நில மாபியாக்கள், ஆக்கிரமிப்புகளில் ஏழைகளை குடியமர்த்தி, அரசிடம் வரன்முறை செய்தபின் அவர்களை வெளியேற்றி விடுவதால் தான் ஏழைகள் ஏழைகளாக இருப்பதாகக் குறிப்பிட்டனர்..

ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டாலும், அது தவறாக பயன்படுத்துவதால் தான் ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் என வேதனை தெரிவித்த நீதிபதிகள், யாரும் நாட்டைப் பற்றி நினைப்பதில்லை என்று கூறியதுடன், தவறை அங்கீகரிக்க கூடாது எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் அளித்த விவரங்களை ஆய்வு செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்கள் உத்தரவாதம் அளிக்கும் வகையில் வழக்கு விசாரணையை 10 நாட்களுக்கு ஒத்திவைத்தனர்.

பெத்தேல் நகரில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வாரம் அரசுக்கு அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர்.


No comments:

Post a Comment

Post Top Ad