ராஜேந்திர பாலாஜி செஞ்ச போன் கால்; கிறுகிறுத்து போன அதிமுக தலைமை!
பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள ராஜேந்திர பாலாஜி செய்த போன் கால் பற்றி அரசியல் வட்டாரத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். ஆனால் ஆட்சி மாறியதும் ராஜேந்திர பாலாஜி போதாத காலம் தொடங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இவர் மீதான வழக்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தூசு தட்டுவதை அறிந்ததும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார்.
அரசியல் ஆர்வத்தில் சில வார்த்தைகளை அதிகமாக உபயோகித்திருக்கலாம் என்றெல்லாம் பேசி மழுப்பினார். இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கு, ஆவின் ஊழல், அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி என அடுத்தடுத்து நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக பண மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டதால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். பின்னர் கர்நாடகாவில் பதுங்கியிருந்த போது வசமாக மாட்டிக் கொண்டார்.
இதையடுத்து கைது, விசாரணை, நிபந்தனை ஜாமீன் என பரபரப்பு நீண்டது. தற்போது வீட்டில் அமைதியாக பொழுதை கழித்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததுமே, மீண்டும் அரசியல் களம் புக ராஜேந்திர பாலாஜி விரும்பினார். விருதுநகர் அதிமுகவில் யார் நிற்க வேண்டும்? யாரை ஓரங்கட்ட வேண்டும்? கூட்டணி சீட் பங்கீடு எப்படி? தேர்தல் பிரச்சார யுக்திகள் என்னென்ன? என மனதிற்குள் கோட்டை கட்ட ஆரம்பித்தார்.
ஆனால் அதிமுக தலைமை வேறுமாதிரியான கணக்குகளை போட்டது. மோசடி வழக்கில் குற்றவாளியான ராஜேந்திர பாலாஜிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். அவருக்கு துணை நிற்கலாம். ஆனால் தேர்தல் தலையீடு வேண்டாம். எனவே விருதுநகர் மாவட்ட அதிமுகவை அந்த மண்ணின் மைந்தன் மாஃபா பாண்டியராஜனுக்கு கொடுக்க ஏற்பாடுகள் நடந்தன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ராஜேந்திர பாலாஜி பெரும் அதிர்ச்சி அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனே எடப்பாடி பழனிசாமிக்கு போன் போட்டு நியாயம் கேட்க நினைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரோ ராஜேந்திர பாலாஜி விஷயத்தில் சற்று ஒதுங்கியே நிற்கிறார். எனவே எடப்பாடியிடம் பேச வாய்ப்பு கிடைக்காது என்று கருதி, அவருக்கு நெருக்கமான மாஜி அமைச்சர் ஒருவருக்கு போன் போட்டு ராஜேந்திர பாலாஜி பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, சிறைவாசம் அனுபவித்து வந்ததில் இருந்தே கட்சிக்குள் சரியான மதிப்பு இல்லை.இந்த சூழலில் தேர்தல் பொறுப்பும் கொடுக்கவில்லை எனில் அவ்வளவு தான். எனது அரசியல் எதிர்காலத்திற்கு சிக்கலாக அமைந்துவிடாதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதேநிலை தொடர்ந்தால் ஊடகங்கள் முன்னாள் சில விஷயங்களை போட்டு உடைக்க நேரிடும். அப்புறம் பெரிய சிக்கலாகிவிடும் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற பாணியில் கூறியதாக அரசல் புரசலாக பேசப்படுகிறது.
இந்த தகவல் அப்படியே எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளாராம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடியட்டும். அதன்பிறகு ராஜேந்திர பாலாஜிக்கு செக் வைக்கப்படும் என்று அதிரடியாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தேர்தல் முடிந்தவுடன் அதிமுகவிற்குள் அதிரடியான சம்பவங்களை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் விவரம் தெரிந்தவர்கள்.
No comments:
Post a Comment