ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: ஐந்து ஆண்டுகளுக்கு இலவச பொருட்கள்!
ஐந்து ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் உறுதியளித்துள்ளார்
உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அம்மாநிலத்தில், பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.
இந்த நிலையில், ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கும் இலவச ரேஷன் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
பாஜக அரசாங்கம் தனது இலவச ரேஷன் திட்டத்தை நிறுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் தேர்தல் காரணமாக அதனை தள்ளி வைத்துள்ளதாகவும் அகிலேஷ் யாதவ் அப்போது குற்றம் சாட்டினார். “ரேஷன் பொருட்களை பெற்று வரும் ஏழை மக்களுக்கு தேர்தல் வரை மட்டுமே அவை கிடைக்கும். முன்னதாக, நவம்பர் மாதமே இலவச ரேஷன் திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக தயாராக இருந்தது. ஆனால், உத்தரப்பிரதேச தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதனை பாஜக அரசு நீட்டித்துள்ளது. மார்ச் மாதம் வரை மட்டுமே ஏழை மக்களால்
அதனை பெற முடியும்.” என்று அகிலேஷ் யாதவ் சுட்டிக்காட்டினார்.சமாஜ்வாதி ஆட்சிகாலத்தில் ரேஷன் பொருட்கள் தரமானதாக கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அகிலேஷ் யாதவ், “உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றி பெற்று சமாஜ்வாதி கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில், எங்கள் ஆட்சி இருக்கும் வரை ஐந்து ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். அதனுடன் சேர்த்து கடுகு எண்ணெய், இரண்டு சிலிண்டர், ஏழை மக்களின் சிறந்த ஆரோக்கியத்துக்காக ஒரு கிலோ நெய் உள்ளிட்டவைகளும் வழங்கப்படும்.” என்றார்.
No comments:
Post a Comment