நித்யானந்தா வழக்கு... மறுவிசாரணை கோரும் நடிகை ரஞ்சிதா!
நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோ காட்சி வெளியான விவகாரம் தொடர்பான வழக்கில் மறுவிசாரணை நடத்தக் கோரி நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பிடதி ஆசிரம தலைவர் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோவை பிரபல தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. நவீன தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சியை காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாக, நித்யானந்தா தியான பீட நிர்வாகி சென்னை காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் லெனின், ஐயப்பன், ஆர்த்தி ராவ் உள்பட பலர் மீது சிபிசிஐடி பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை மறு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும், ஆர்த்திராவ், பரத்வாஜ் இடையே நடந்த இ-மெயில் உரையாடலையும், கர்நாடக மாநில அமர்வு நீதிமன்றத்தில் உள்ள மார்பிங் வீடியோ கேசட் குறித்தும் மீண்டும் விசாரிக்க கோரியும் நடிகை ரஞ்சிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சிதா தரப்பில் இந்த வழக்கை நேரடி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நேரடி விசாரணைக்கு அனுமதித்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment