முதல்வருக்கு லெட்டர் எழுதிய ஆளுநர்... மாநில அரசியலில் பெரிய டுவிஸ்ட்!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் தன்கருக்கும் இடையில் மோதல் போக்கு இருந்துவரும் நிலையில், அந்த மாநில அரசியலில் ஆளுநர் இன்று புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜெக்தீப் தன்கருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இதன் உச்சக்கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநர் மாநில சட்டமன்றத்தை முடக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநரின் இந்த அதிரடி நடவடிக்கை பாஜக அல்லாத மாநிலங்களில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேற்கு வங்க அரசியலில் ஆளுநர திடீர திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.
அதாவது மேற்கு வங்க சட்டமன்றம் முடக்கப்பட்டதை தொடர்ந்து, சட்டசபை கலைக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக, பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெக்தீப் தன்கர் கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்க அரசியலில் மிகவும் முக்கிய திருப்பமாக கருதப்படும் இந்த கடிதத்தில், "மாநிலத்தின் பல்வேறு கவலை மிகுந்த விஷயங்கள் குறித்து அவசரமாக ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
உங்களின் (முதல்வர்) நிலைப்பாட்டின் காரணமாக,தான் ஆலோசனை நடத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் பலனளிக்கவில்லை. நிலுவையில் உள்ள பிரச்னைகளை இந்த வார இறுதியில் பேசி தீர்ப்போம். ஆளுநர் மாளிகையில் எந்த நேரம் வேண்டுமானாலும் கலந்துரையாடல் மேற்கொள்ளலாம்" என்று முதல்வர் மம்தாவுக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் தன்கர்
குறிப்பிட்டுள்ளார்.ஆளுநரின் இந்த திடீர் பகிரங்க அழைப்பு எதற்காக, தன் மீது தவறில்லை என காட்டிக் கொள்வதற்காக ஆளுநர் இந்த அழைப்பை விடுத்துள்ளாரா, இந்த அழைப்பை முதல்வர் மம்தா ஏற்பாரா போன்ற கேள்விகளுக்கான விடை ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
No comments:
Post a Comment