சைக்கிளில்தான் குண்டு வச்சு வெடிப்பாங்க.. மோடி பேச்சு.. கொந்தளித்த அகிலேஷ்
சமாஜ்வாடிக் கட்சியின் சின்னத்தை வெடிகுண்டுகளை ஏந்திச் செல்லும் வாகனமாக பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்துள்ளார்.
சமாஜ்வாடிக் கட்சியின் சின்னம் என்னன்னு தெரியுமா?.. சைக்கிள்... சைக்கிளில்தான் தீவிரவாதிகள் குண்டுகளை வைத்து வெடிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதற்கு சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் 2008ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 38 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு தூக்குத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்தபோது குஜராத் முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பு குறித்து நரேந்திர மோடி உ.பி. தேர்தல் பிரசாரத்தின்போது பேசுகையில், 2 நாட்களுக்கு முன்பு அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. உங்களுக்கு அது தெரியும். இந்தியர்களை சிதைக்க முயன்றவர்களுக்கு கோர்ட் தூக்குத் தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கியுள்ளது. பல தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. இதுபோன்ற தீவிரவாதிகளுக்கு இன்றும் கூட பல கட்சியினர் ஆதரவு தருகின்றனர். அனுதாபம் காட்டுகின்றனர். வாக்கு வங்கிக்காக இந்த அரசியல்வாதிகள், தீவிரவாதிகளிடம் மென்மையான போக்கைக் கையாளுகின்றனர். இது நாட்டுக்கு மிகவும் அபாயமானது.
2008ம் ஆண்டு அகமதாபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சைக்கிள்களில்தான் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. நகரின் 50-60 இடங்களில் குண்டுகள் வெடித்தன. ஒரு மருத்துவமனை அருகே வைக்கப்பட்டிருந்த கு ண்டு வெடித்து நோயாளிகள் பலரும் இறந்தனர். தீவிரவாதிகள் என்ன செய்தார்கள் தெரியுமா? சமாஜ்வாடிக் கட்சியின் சின்னத்தைப் பார்த்துள்ளீர்களா?. குண்டுகள் எல்லாம் அதுபோன்ற சைக்கிள்களில்தான் வைக்கப்பட்டிருந்தன. மக்கள் நடமாடும் பகுதிகளில் குண்டு வைத்திருந்தனர். அவர்கள் ஏன் சைக்கிள்களைப் பயன்படுத்தினர் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.இங்கும் கூட உ.பியில் 2006ம் ஆண்டு காசியில் குண்டுவெடிப்பு நடந்தது. சங்கத் மோகாக் கோவிலில் குண்டு வெடித்தது. அப்போதுதான் சமாஜ்வாடி கட்சி ஆளுங்கட்சியாக பதவியேற்றிருந்தது. 2013ம் ஆண்டு சமாஜ்வாடிக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. காசி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றும் முயற்சி நடந்தது. இதை எப்படி ஏற்க முடியும்? இதுபோன்றவர்களுக்கு மீண்டும் தேர்தலில் வெல்ல வாய்ப்பளிக்கலாமா? என்றார் மோடி.
சமாஜ்வாடி கடும்
கண்டனம்
தீவிரவாதிகளின் சைக்கிள் குண்டுகளை, தனது கட்சியுடன் தொடர்புப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளதற்கு சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில், சைக்கிள்கள் விவசாயிகளின் நண்பன். அவர்களின் வளர்ச்சிக்கு அடித்தளமே சைக்கிள்கள்தான். நமது சைக்கிள் நமது மகள்களை பள்ளிகளுக்குக் கொண்டு போய் விட உதவும் எளிய வாகனங்கள். பணவீக்கத்தால் நமது போக்குவரத்து பாதிக்கப்படாமல் நம்மைக் காப்பது சைக்கிள்கள்தான். நமது வேகத்தை நாமே நிர்ணயிக்க முடியும். சாதாரண மக்களின் விமானம்தான் சைக்கிள்கள். ஊரக இந்தியாவின் பெருமை சைக்கிள். சைக்கிளை இழிவுபடுத்துவது, அவமதிப்பது ஒட்டுமொத்த நாட்டையும் அவமதிப்பதற்குச் சமம் என்று போட்டுத் தாக்கியுள்ளார்.
No comments:
Post a Comment