அனைத்துக் கட்சி கூட்டம்: அதிமுக புறக்கணிக்க என்ன காரணம்?
முதல்வர் ஸ்டாலின் இன்று கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்ததற்கான காரணம் குறித்த முக்கிய தகவல் கசிந்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரிய சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதுதான் தாமதம். உடனே முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, அதில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவதெனவும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. சிறப்பு சட்டமன்ற கூட்டத்துககான தேதியையும் சபாநாயகர் அறிவித்தும்விட்டார்.
முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணித்ததில் வியப்பேதும் இருக்க முடியாது. ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆண்டுக்கணக்கில் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு, இன்றைய கூட்டத்தை புறக்கணித்ததுதான் தமிழக அரசியலில் இன்றைய டாக் ஆஃப் தி டே.
அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான சட்டமன்ற கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் கிட்டதட்ட ஐந்து மாதங்கள் கழித்து ஆளுநர் திருப்பி அனுப்பிய பிறகு நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பொறுப்பான எதிர்க்கட்சி என்ற முறையில் அதிமுக அவசியம் பங்கேற்று இருந்திருக்க வேண்டும். இன்றைய கூட்டத்தை புறக்கணித்ததன் மூலம், நீட் தேர்வு விலக்கு கோரும் விஷயத்தில் அதிமுகவின் நிலைப்பாட்டுக்கு நேர்முரணான நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்துவிட்டதாக அரசியல் ஆர்வலர்கள் தங்களது விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.இந்த விமர்சனம் குறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, 'இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்றே சென்னை வந்துவிட்டாராம். அதன் பிறகே, 'அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் திமுக அரசியல் செய்கிறது.
அவர்களின் அரசியலுக்கு நாம் துணைப் போக வேண்டுமா?' என்று, முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினாராம். அவரது இந்த கேள்வியின காரணமாகவே கூட்டத்தை புறக்கணிப்பு என்ற முடிவை ஓபிஎஸ் எடுத்ததாகவும், நீட் விலக்கு விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாட்டை விலக்கி அவர், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதென அதிமுக கடைசி நேரத்தில் முடிவெடுத்ததற்கு பாஜக மேலிடத்தில் இருந்து அழுத்தம் வந்திருக்குமோ இல்லையோ திமுக தலைமையில், அதிமுகவும் இந்த விஷயத்தில் ஓரணியாக திரள கூடாது என்பதில் மட்டும் இபிஎஸ் தெளிவாக உள்ளதாக தெரிகிறது.
அனைத்துக் கட்சி கூட்டம் புறக்கணிப்பு என்ற தங்களது இந்த முடிவின் மூலம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவை கைக்காட்டி பேச, முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ்- ஓபிஎஸ் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை.
No comments:
Post a Comment