மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்: ஹிஜாப், பர்தா அணிந்து வந்த மாணவிகள்
ஹிஜாப் சர்ச்சையால் மூடப்பட்ட கர்நாடக உயர் நிலைப்பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்ததற்கிடையே, இந்து மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது.மாநிலத்தில் பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு, உயர்நிலை பள்ளிகள், கல்லூரிகளுக்கு கடந்த 10ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பெங்களூரில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹிஜாப் வழக்கு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஒன்றை கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது. இவ்வழக்கு தொடர்பாக வருகிற திங்கள்கிழமை (இன்று) விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து ஹிஜாப் சர்ச்சையால் மூடப்பட்ட கர்நாடக உயர் நிலைப்பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. 10ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அம்மாநிலம் உடுப்பி அரசு உயர் நிலை பள்ளிக்கு வந்த மாணவிகள் சிலர் பர்தா அணிந்து வந்தனர். அதேசமயம், பள்ளி வளாகத்துக்குள்தான் மத அடையாளம் சார்ந்த உடைகளுக்கு தடையே தவிர, வெளியே ஹிஜாப், பர்தா போன்றவற்றை மாணவிகள் அணிந்து கொள்ளலாம் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.முன்னதாக, பள்ளிகளில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை
உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரிகளுக்கு 16ஆம் தேதி வரையும், பிற கல்லூரிகளுக்கு 17ஆம் தேதி வரையும் ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது 10ஆம் வகுப்பு வரை உயர் நிலைப் பள்ளிகள் மட்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையை ஆராய்ந்த பிறகு பி.யூ.கல்லூரிகள் மற்றும் பிற கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment