மதிய சத்துணவில் அழுகிய முட்டை; மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு; பெற்றோர்கள் கொந்தளிப்பு!
அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவில் அழுகிய முட்டையை சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
தர்மபுரி அருகே பெரும்பாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவில் வழங்கப்பட்ட சத்துணவில் அழுகிய முட்டைகளை சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு தொடர் வயிற்றுப்போக்கால் அவதியுற்றுனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மதிய சத்துணவில் முட்டை அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதை அறியாமல் சாப்பிட்ட சில மாணவர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து சத்துணவு மையத்தில் நுழைந்து பார்த்த மாணவர்கள் அங்கே வைக்கப்பட்டிருந்த முட்டைகள் பாதிக்கும் மேலாக அழுகிய நிலையிலும், துர்நாற்றம் அதிகளவில் வந்துள்ளது. இதை பார்த்து ஆச்சரியம் அடைந்த பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலறிந்த வந்த பெற்றோர்கள் சத்துணவு மையத்தை முற்றுகையிட்டு சத்துணவு அமைப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் பி டி ஒ அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் மாணவர்களுடைய பெற்றோர்கள் மதிய உணவு தரமாக இருப்பதில்லலி எனவும் துர்நாற்றம் வீசுவதாகவும் புகார் அளித்தனர். மேலும் இதனை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு பேதி , மயக்கம் காய்ச்சல் என பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டினர்.இதனையடுத்து சத்துணவு அமைப்பாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மேலும் பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவ்வாறு செய்யாத பட்சத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதே நிலை நீடித்தால் மாணவர்களுடைய மாற்றுச் சான்றிதழை வாங்கி வேறு பள்ளியில் சேர்ப்பது தான் வழி என்று பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனால் தர்மபுரியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment