கே.டி.எம், பல்சர் மட்டும்தான்.... பாண்டிச்சேரிக்கு பைக் திருட சென்ற வாலிபர்கள்
புதுச்சேரியில் விலையுயர்ந்த பைக்குகளை திருடிய தமிழகத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரியில் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடிய தமிழகத்தை சேர்ந்த 3 இளைஞர்களை போலீசர் கைது செய்து அவர்களிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், புதுச்சேரி மாநில எல்லைகளிலும் தீவிர வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் புதுச்சேரி எல்லையான காலாப்பட்டு கனகசெட்டிகுளம் பகுதியில் நள்ளிரவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பச்சி மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், கடலூர் நெல்லிக்குப்பத்தை
சேர்ந்த தீனா என்கிற மணிகண்டன், திண்டிவனம் ரெட்டனையைச் சேர்ந்த பரத் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்ததை அடுத்து போலீசார் 3 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவர்கள் புதுச்சேரிக்கு வரும்போதெல்லாம் புதுச்சேரியிலிருந்து விலை உயர்ந்த கே.டி.எம், பல்சர், அப்பாச்சி போன்ற விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இவர்கள் திருடிச்சென்று மறைத்து வைத்திருந்த 14 விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 25 லட்சம் ரூபாய் ஆகும். இதனை அடுத்து போலீசார் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞர்களையும் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment