தூள் தூளாய் சிதறப் போகும் அதிமுக; திமுக அமைச்சர் பகீர் தகவல்!
பரமக்குடியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தலைவர்கள் பேசினர்.
இந்த கூட்டத்தில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஏதாவது பண்ணி ஜெயிக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக ஆட்சி தொடர்ந்து இருக்கும். எதிர்ப்பதற்கு வேற எந்த கட்சியும் இங்கு கிடையாது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுக கூட்டணியில் 40 சதவீத இடங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுள்ளார்.
அந்த கட்சி என்ன அவ்வளவு பெரிதாக வளர்ந்து நிற்கிறதா என்ன? அப்புறம் எப்படி அத்தனை சதவீதம் கேட்டனர். பாஜகவில் சேர்ந்தவர்கள் அனைவரும் படிப்படியாக தாய்க் கட்சிக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். பாஜக என்பது கூடாரம். அந்த கட்சி தமிழகத்தில் வளராது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக மட்டுமே திராவிடக் கட்சி. அதிமுக கிடையாது.அமமுக போன்று கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து ஓரங்கப்பட்டு விடுவர். அதிமுக சிதறி காணாமல் போய்விடும். எல்லாரும் வந்து திராவிடக் கட்சியில் சங்ககம் ஆகிவிடுவார்கள். அதற்கு நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் ஒரே தலைவர் என்று கூறினார்.
தொடர்ந்து பேசுகையில், அதிமுகவில் புரியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கின்றனர்.
நான் அமைச்சராக இருந்த போது எடப்பாடி பழனிசாமி வெறும் எம்.எல்.ஏ மட்டுமே. ஓ.பன்னீர்செல்வம் நகரச் செயலாளர். இவர்கள் என்ன கட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். திராவிட இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் நம்முடன் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் கூட கு.க.செல்வம் திமுகவில் வந்து சேர்ந்துவிட்டார். மகளிருக்கு முக்கியத்துவம் அளித்து இலவச பேருந்து பயண திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று பலரும் பாராட்டுகின்றனர். அந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment