தமிழர்களுக்கு மோடி சர்டிஃபிகேட் தர வேண்டாம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்டாக்!
தமிழர்களின் நாட்டுப்பற்றுக்கு பிரதமர் மோடி சான்றிதழ் தர தேவையில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி பிரச்சாரம் செய்தார்.அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழர்களின் நாட்டுப்பற்றுக்குப் பிரதமர் மோடி சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை என்று கூறினார். அவர் பேசியபோது, “தமிழ்நாட்டில் கழக ஆட்சி பொறுப்பேற்றதும் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 902 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் பெறப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நாடாளுமன்றத் தேர்தலிலும் - சட்டமன்றத் தேர்தலிலும் கழகத்துக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்த மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம். அதேபோன்ற வெற்றியை உள்ளாட்சித் தேர்தலிலும் நீங்கள் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட மண் என்பது வீரம் விளைந்த மண். நாடு காக்க, நாட்டின் விடுதலைக்காக உயிரையே தியாகம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார், எழுச்சிக்கவி பாரதியார் ஆகியோர் பிறந்த மண்.
வீரமங்கை வேலுநாச்சியாரையும், வ.உ,.சி.யையும், பாரதியையும் டெல்லி குடியரசு தின விழா ஊர்தி அணிவகுப்பில் அனுமதிக்க மறுத்தார்கள். அதனால் என்ன? எங்கள் தமிழ்நாட்டு வீதிகள்தோறும் அவர்கள் வலம் வரட்டும் என்று அந்த அலங்கார ஊர்தியை விடுதலைப் போராட்ட எழுச்சியோடு அனுப்பிய இனமான ஆட்சிதான் நமது கழக ஆட்சி. அந்த அலங்கார ஊர்தி உங்கள் மாவட்டத்துக்கு வந்தபோதும் நீங்கள் அளித்த மகத்தான வரவேற்பை ஊடகங்களில் நானும் பார்த்தேன்.
No comments:
Post a Comment