மெரினாவில் இன்னும் ஒரு வாரம்: ஸ்டாலின் வெளியிட்ட ‘நச்’ தகவல்!
குடியரசு தின அலங்கார ஊர்திகள் மெரினாவில் மேலும் ஒரு வாரம் காட்சிப்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
டெல்லியில் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக தமிழக அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசு அதனை நிராகரித்து விட்டது. இதனை தொடர்ந்து டெல்லி குடியரசு தின கொண்டாட்டங்களில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும் எனவும், அவை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொது மக்கள் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், கர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், பூலித்தேவன், அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார்கோவில் கோபுரம் ஆகியவை இடம் பெற்றிருந்த அலங்கார ஊர்திகள் தமிழக அரசின் குடியரசு தின விழாவில் அணிவகுத்தன.
மேலும், பாரதியார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, சேலம் விஜயராகவாச்சாரி போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள், பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காமராஜர், இரட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, பொல்லான், திருப்பூர் குமரன், திருச்சி வ.வே.சாமிநாத அய்யர், காயிதே மில்லத், தஞ்சை ஜோசப் கொர்னேலியஸ் செல்லத்துரை குமரப்பா, கக்கன், கடலூர் அஞ்சலையம்மாள் ஆகியோரின் உருவப்படங்களும் இடம்பெற்றிருந்த ஊர்திகளின் அணிவகுத்தன. மொத்தம் 3 அலங்கார ஊர்திகள் தமிழக அரசின் குடியரசு தின விழாவில் அணிவகுத்தன.அதன் தொடர்ச்சியாக, முதல்வர் அறிவிப்பின்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொது மக்கள் பார்வைக்காக அந்த அலங்கார ஊர்திகள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்தந்த மாவட்டங்களில் பொதுமக்கள் அலங்கார ஊர்திகளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இறுதியாக சென்னை மெரினா கடற்கரையில் இந்த அலங்கார ஊர்திகளை பொது மக்கள் பார்வையிடுவதற்காக பிப்ரவரி 23ஆம் தேதி வரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி விவேகானந்தர் இல்லம் எதிரேயுள்ள மணற்பரப்பில் இந்த ஊர்திகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மெரினாவில் நிறுத்தப்பட்டுள்ள அலங்கார ஊர்திகள் பொதுமக்கள் பார்வைக்கு மேலும் ஒரு வாரம் காட்சிப்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை மெரினாவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த அலங்கார ஊர்திகளை பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு வருவதாகவும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வார காலம் இந்த அலங்கார ஊர்திகள் சென்னை மெரினாவில் காட்சிப்படுத்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment