கொண்டப்பன் வீடும்.. நான் குடித்த கூழும்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, February 12, 2022

கொண்டப்பன் வீடும்.. நான் குடித்த கூழும்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி

கொண்டப்பன் வீடும்.. நான் குடித்த கூழும்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி


பாமக தொண்டர்களின் வீடுகளில் தான் சாப்பிட்டது குறித்து நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.
எனக்கு கொண்டப்பன்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள்.... அவர்கள் வீடுகளில் கூழ் குடித்த நினைவுகளும் எனது மனம் முழுவதும் நிறைந்திருக்கின்றன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் எழுதியிருப்பதாவது:
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்களின் திருமண நாள், பிறந்தநாளுக்காக மரம் நட வேண்டும்; அவ்வாறு மரம் நட்டவர்கள் அதற்கான புகைப்படத்தை எனக்கு அனுப்பினால், அவர்களை நானே தொடர்பு கொண்டு வாழ்த்துவதுடன், அதை எனது முகநூல் பக்கத்திலும் வெளியிடுவேன் என்று கூறியிருந்தேன். அதன்படி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஐந்தாயிரத்திற்கும் கூடுதலான மரக்கன்றுகளை நட்டுள்ளனர். திருப்பூர் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் வ.கோ. பிரதீப் குமார் அவரது மகன் லோகித்தின் பிறந்தநாளையொட்டி மரக்கன்று நட்டிருந்தார். லோகித்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதற்காக பிரதீப்குமாரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். அப்போது அவரது தந்தை பாட்டாளி மக்கள் கட்சியில் எவ்வாறு இணைந்தார் என்பதையும், அதன்பின்னர் அவரது ஊரில் அவரது குடும்பத்திற்கு எவ்வளவு மரியாதை அதிகரித்தது என்பதையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவர் தெரிவித்த தகவல்கள் 32 ஆண்டுகளுக்கு முந்தைய எனது நினைவுகளை மனதில் எழுப்பின.1989ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 3 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்திருந்த காலம். வாரத்தின் பெரும்பான்மையான நாளில் கட்சிப் பணியும், மீதமுள்ள நாளில் திண்டிவனத்தில் உள்ள எனது மருத்துவமனையில் மருத்துவப் பணியும் பார்த்துக் கொண்டிருந்த காலம். ஒரு நாள் காலையில் நான் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது, அன்றைய ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம், இன்றைய திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்தைச் சேர்ந்த குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்ற பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி என்னை சந்திப்பதற்காக வந்தார். அவருடன் மிகவும் வறிய நிலையில் இன்னொருவரும் வந்திருந்தார். அவர் மிகவும் சோர்ந்திருந்தார். இருவருமே மிகவும் பதற்றமாக இருந்தனர். அவர்கள் ஏதோ பிரச்சினையில் சிக்கியுள்ளனர் என்பதை மட்டும் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

எதற்காக என்னை சந்திக்க வந்தீர்கள்... என்ன விஷயம்? என்று கேட்ட நான், அவர்கள் பதில் கூறுவதற்கு முன்பாகவே,‘‘ எதுவாக இருந்தாலும் பிறகு பேசலாம். முதலில் உணவு சாப்பிடுங்கள்’’ என்று கூறி, அவர்களுக்கு உணவு வழங்கும்படி கூறினேன். விஜயனும், அவருடன் வந்தவரும் உணவு சாப்பிட்டு விட்டு என்னை சந்திக்க வந்தனர். அவர்களின் முகத்தில் பதற்றம் தணிந்திருந்தது. ‘‘இப்போது என்ன பிரச்சினை என்பதை சொல்லுங்கள்’’ என்றேன்.

நடந்தது என்ன?
இருவரும் சொல்லத் தொடங்கினார்கள். அவர்கள் கூறியது இது தான். விஜயனுடன் வந்தவர் பெயர் கொண்டப்பன். அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். குன்னத்தூரை அடுத்த வத்தாலபதி கிராமத்தைச் சேர்ந்தவர். குன்னத்தூர் சந்தையில் தேங்காய் மூட்டை தூக்குவது தான் அவரது தொழில். 1989&ஆம் ஆண்டில் குன்னத்தூருக்கும், வத்தாலபதிக்கும் இடையே பெரிய அளவில் போக்குவரத்து வசதிகள் இல்லை. அதனால், கொண்டப்பன் முதல் நாள் இரவில் அவரது வீட்டிலிருந்து குன்னத்தூர் சந்தைக்கு நடந்தே செல்வார். அங்கு சாலையோரத்தில் படுத்து உறங்கி விட்டு, அதிகாலையில் சந்தைக்கு வரும் தேங்காய் மூட்டைகளை வாகனத்திலிருந்து இறக்கும் வேலையை செய்வார். காலை 10 மணிக்கு வேலை முடிந்தவுடன் வீடு திரும்புவார். இது தான் அவரது வழக்கம்.

பொய்வழக்கில் கைது

குன்னத்தூர் சந்தையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த விஜயன் சற்று செல்வாக்கு மிகுந்த நபராக இருந்தார். அவரும் கொண்டப்பனும் நண்பர்கள். ஒருநாள் இரவில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த கொண்டப்பனை குன்னத்தூர் காவல்துறையினர் பொய்வழக்கில் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்தவுடன் விஜயன் குன்னத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டப்பனை வெளியில் அழைத்து வந்து விசாரித்திருக்கிறார். அவரிடம் கொண்டப்பன் நடந்ததை விவரித்ததுடன், அடுத்த சிறிது நேரத்தில் தம்மை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைக்கப்போவதாகவும், அவ்வாறு அடைத்தால் குறைந்தது ஒரு மாதமாவது சிறையில் அடைபட்டிருக்க வேண்டியிருக்கும் என்று காவலர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

கதறி அழுத கொண்டப்பன்
தம்மை எப்படியாவது காப்பாற்றும்படி கதறிய கொண்டப்பன், அவ்வாறு காப்பாற்றாவிட்டால், தம்மை சந்தேக வழக்கில் அடிக்கடி கைது செய்து கொடுமைப்படுத்துவார்கள்; அதனால் தமது எதிர்காலமே வீணாகி விடும் என்றும் கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் கொண்டப்பனின் மனைவி கருவுற்று இருந்திருக்கிறார். கொண்டப்பனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று விஜயன் தீர்மானித்தார். அவர் மனதில் ஒரு திட்டம் இருந்தது. கொண்டப்பனை எப்படி காப்பாற்ற முடியும்? என்று அவருக்கு தெரிந்திருந்தது. உடனடியாக கொண்டப்பனிடம் ஒரு யோசனையை கூறினார் விஜயன். ‘‘சிறுநீர் கழிக்கப் போவதாக கூறி விட்டு வெளியில் வா... மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’’ என்று கொண்டப்பனிடம் விஜயன் கூறினார். அதன்படியே கொண்டப்பனும் சிறுநீர் கழிக்கப்போவதாக காவலர்களிடம் கூறிவிட்டு வெளியில் வந்தார்.

குன்னத்தூரில் போராட்டம்

கொண்டப்பனை சந்தைக்கு வந்து திரும்பிக் கொண்டிருந்த மாட்டு வண்டி ஒன்றில் ஏற்றிய விஜயன், அவரை ஈரோடுக்கு அழைத்துச் சென்றார். இரவு வரை ஈரோட்டில் இருந்து விட்டு, பின்னர் அங்கிருந்து தொடர்வண்டி ஏறி அடுத்த நாள் காலையில் திண்டிவனத்துக்கு வந்து சேர்ந்தனர் கொண்டப்பனும், விஜயனும். கொண்டப்பனுக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கேட்ட நான், கொண்டப்பனை காப்பாற்றுவதாக உறுதியளித்ததுடன், குன்னத்தூருக்கு தொடர்வண்டியில் திரும்பிச் செல்வதற்கு கொண்டப்பனுக்கும் விஜயனுக்கும் பணம் கொடுத்து அனுப்பி வைத்தேன். அவர்களும் மாலையில் தொடர்வண்டி ஏறி அடுத்த நாள் காலையில் குன்னத்தூரை சென்றடைந்தனர். அதற்குள்ளாகவே ஈரோடு மாவட்ட பா.ம.க; நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசிய நானும், அவர்கள் சென்றடைந்த சிறிது நேரத்திற்குள்ளாக குன்னத்தூருக்கு சென்றடைந்தேன்.

சாட்டையால் அடித்து தோலுரிப்பேன்
அப்பாவி கொண்டப்பனை கைது செய்த காவல்துறையினரை கண்டித்து, குன்னத்தூர் நால்ரோட்டில் தொடங்கி, பெட்ரோல் பங்க் வரை எந்த வித முன்னறிவிப்புமின்றி நடக்கத் தொடங்கினேன். என்னுடன் ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் எம்.பி. வெங்கடாச்சலம், பவானி இராமநாதன், எஸ்.ஆர்.சி கோபால், எஸ்.சி. பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகளும் என்னுடன் அணிவகுத்து வந்தனர். குன்னத்தூர் காவல்நிலையத்தை நான் அடைந்த போது, என்னுடன் பேரணியே வந்தது. காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தில் பேசிய நான்,‘‘ ஓர் அப்பாவி மீது பொய்வழக்கு போட்ட காவல்துறை அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், காக்கிச்சட்டைகளை சாட்டையால் அடித்து தோலுரிப்பேன்’’ என்று முழங்கினேன். அதன்பின்னர் கொண்டப்பன் மீது பதிவு செய்யப்பட்ட பொய்வழக்கு ரத்து செய்யப்பட்டது. கொண்டப்பனுக்காக நான் நடத்திய போராட்டத்தைப் பார்த்த அவர், அதன்பிறகு பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார்.

கூழ் குடித்த நினைவுகள்
அதன்பின்னர் 1990&ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்திற்கு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்ற போது, குன்னத்தூரில் கொண்டப்பன் என்பவருக்காக போராடினோமே, அவர் எப்படியிருக்கிறார்? என்று பா.ம.க. நிர்வாகிகளிடம் கேட்டேன். அவர்கள் என்னை கொண்டப்பன் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அது ஓர் ஓலைக்குடிசை. கொண்டப்பன் வீட்டு வாசலில் அமைக்கப்பட்ட மூங்கில் கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றி வைத்தேன்.

தமிழ்நாடு முழுவதும் கொண்டப்பன்கள்


கொண்டப்பனுக்காக நான் போராடும் போது அவரது மகன் பிரதீப் குமார் பிறக்கவில்லை. கொண்டப்பனை சந்திக்கும் போதெல்லாம் அவர் கூறுவது,‘‘ எனக்காக அய்யா வந்து போராடியிருக்கா விட்டால், என்னை அடுத்தடுத்து பொய் வழக்குகளில் கைது செய்து எனது வாழ்க்கையை சிதைத்து இருப்பார்கள்’’ என்பது தான். அதுமட்டுமின்றி,‘‘ எங்கள் பகுதியில் உள்ள உயர்சாதியினர் எங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். எங்கள் குடும்பம் மீதும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால், மருத்துவர் அய்யா ஒருமுறை எனது வீட்டிற்கு வந்து உணவருந்தி, கொடியேற்றி வைத்து விட்டு சென்றவுடன், எங்கள் குடும்பம் மீதான அவர்கள் பார்வை மாறி விட்டது. நீ டாக்டர் ஆளுப்பா... அவர் தான் உங்கள் வீட்டுக்கு வந்து சென்றாரே’’ என்று கூறுவார்கள். எங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை. அருந்ததியராக இருந்தாலும் எங்களுக்கான மரியாதையை அனைத்து சாதியினரும் கொடுத்தார்கள். இவை அனைத்தும் மருத்துவர் அய்யா அவர்களால் எங்களுக்கு கிடைத்த மரியாதை’’ என்றும் கொண்டப்பன் இப்போதும் கூறி வருகிறார். எனக்கு கொண்டப்பன்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள்.... அவர்கள் வீடுகளில் கூழ் குடித்த நினைவுகளும் எனது மனம் முழுவதும் நிறைந்திருக்கின்றன.





No comments:

Post a Comment

Post Top Ad