நீ்ட்: அரசியல் செய்கிறதா மத்திய பாஜக அரசு?
நீட் விவகாரத்தின் எதிரொலியாக கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ள நிலையில், உயர்கல்வியை மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்ல பாஜக ஆர்வம் காட்டாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீண்டுமொரு முறை நீட் விலக்கு மசோதாவை இயற்றி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வசம் அளித்துள்ளது. இரண்டாவது முறை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஆளுநர் மனம் இறங்கி ஒப்புதல் அளித்துவிடுவாரா என்று யாருக்கும் தெரியாது. ஆனால், இந்த முறை மசோதாவை மாதக்கணக்கில் தன்னுடைய மாளிகையிலேயே அவரால் வைத்திருக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்.
ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கூடிய விரைவில் அனுப்பி வைத்தாலும் அதற்கு ஜனாதிபதி உடனே ஒப்புதல் அளித்துவிடுவாரா அல்லது தற்போது போலவே முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டமன்றதத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மத்திய அரசின் வசம் ஆண்டுக்கணக்கில் பத்திரமாக இருந்தது போன்றே தற்போதும் இருக்குமா என்பதெல்லாம் கல்வி கடவுளான அந்த சரஸ்வதிக்கே வெளிச்சம்.
சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம், ஆளுநருக்கு அனுப்புதல், அதனை அவர் திருப்பி அனுப்புதல், மீண்டும் மசோதா நிறைவேற்றம் என ஆட்சிக்கு ஆட்சி இந்த விஷயம் ரிப்பீட் ஆவதை தவிர்க்கவும், மாணவர்களின் கல்வி விஷயத்தில் மத்திய அரசுடன் தொடர்ந்து மல்லுக்கட்டும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வபோது ஒலித்து கொண்டிருக்கின்றன.
அதாவது அரசியலமைப்பு சட்டப்படி, அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வி தற்போது பொது பட்டியலில் உள்ளதால், நீட் போன்ற முக்கியமான விஷயங்களில் சட்டத்துககுட்பட்டும் மாநில அரசுகள் அவற்றின் விருப்பப்படி முடிவெடுக்க முடிவதில்லை. சட்ட உரிமையின்படி எந்த மாநிலமாவது நீட்டில் இருந்து விலக்கு கோரினால், அதே சட்டம் தமக்கு அளித்துள்ள உரிமையின்அடிப்படையில் மத்திய அரசு முட்டுக்கட்டை போடும் நிலை நீடித்து வருகிறது.
இந்த மல்லுக்கட்டும் போராட்டத்துககு முடிவுகட்டும் விதத்தில் கல்வியை முழுமையாக மாநில அரசு பட்டியலுக்கு மாற்றிவிட்டால், நீட் போன்ற மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தமான முக்கிய விஷயங்களில் மாநில அரசுகளே முழு சுதந்திரத்துடன் முடிவெடுக்கும் நிலை ஏற்படும்.
ஆனால் தற்போதைய நிலையில், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் விரும்புவதை போல, கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வருவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. காரணம், இதற்கான சட்டத் திருந்த மசோதா நாடாளுமன்றங்களில் இரு அவைகளிலும் முதலில் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். ஆனால் மக்களவையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பலத்துடன் உள்ளதுடன், பெரும்பாலான மாநிலங்களிலும் இக்கட்சியே ஆட்சி புரிந்து வருவதால் மாநிலங்களவையிலும் பாஜக பலமாகவே இருக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்வு என்ற ஒற்றை நோக்கத்துடன் இருக்கும் ஒரு கட்சி, இரு அவைகளிலும் பலத்துடன் இருக்கும்போது, கல்வி விஷயத்தை போனால் போகட்டும் என்று மாநிலங்களுக்கு விட்டு கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
No comments:
Post a Comment