நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளதுதமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த 4ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்தது. மாநகராட்சிகளின் 1,374 பதவிகளுக்கு போட்டியிட 14,701 வேட்புமனுக்களும், நகராட்சியில் உள்ள 3,843 இடங்களுக்கு 23,354 வேட்புமனுக்களும், போரூராட்சிகளில் உள்ள 7,621 இடங்களுக்கு 36,361 வேட்புமனுக்கள் என மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வேட்புமனுக்களை பரிசீலிக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அவ்வாறு பரிசீலிக்கப்பட்ட வேட்புமனுக்களில், மாநில தேர்தல் ஆணையத்தின் விதிப்படி இல்லாத வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்டால், மாற்று வேட்பாளரின் வேட்புமனு தானாக ரத்து செய்யப்படும். இதையடுத்து திரும்ப பெறப்பட்ட வேட்புமனுக்களை தவிர்த்து, இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும். அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.அதன் தொடர்ச்சியாக வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அவர்களது கட்சி சின்னம் ஒதுக்கப்படும். சுயேச்சைகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கும். ஒரே சின்னத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் கோரும் பட்சத்தில் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment