ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்குமா? புதிய அறிவிப்பால் பெரிய சிக்கல்!
புதிதாக தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த பயிற்சி முடிவடைந்த உடன் ஆசிரியர்கள் அதற்குரிய பின்னூட்டத்தை எழுதி தருவர். அதற்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். அதேசமயம் ஆண்டுதோறும் வழங்கப்படும் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வானது ஆசிரியர்களின் அனுபவத்திற்கு ஏற்ப வழக்கமான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநில திட்ட இயக்குநர் சமீபத்தில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதன் முடிவில் கொள்குறி வகையிலான வினாத்தாள் அளிக்கப்படும்.
இந்த தேர்வை ஆசிரியர்கள் எழுதி குறிப்பிட்ட மதிப்பெண்ணை பெற வேண்டியது கட்டாயம். அப்படி பெற்றால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு சான்றிதழ் பெறும் ஆசிரியர்களுக்கு மட்டுமே ஆண்டு இறுதியில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு ஆகியவை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன் அவர்களை ”சமயம் தமிழ்” சார்பில் தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்கு அவர், மாநில திட்ட இயக்குநரின் சுற்றறிக்கையானது புதிய கல்விக் கொள்கையை புறவாசல் வழியாக கொண்டு வர முயற்சிப்பதை போல் தெரிகிறது.
இது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் சான்றிதழ் பெறாத ஆசிரியர்களின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இத்தகைய திறன் மேம்பாட்டு பயிற்சியை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் முதல் அனைத்து துறை பணியாளர்களுக்கும் தமிழக அரசு நடத்துமா? என்று விளக்கம் அளிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய விஷயங்களை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment