Breaking: ‘டி20 தொடர்’…மேலும் ஒரு இந்திய வீரர் விலகல்: சிக்கலில் நிர்வாகம்...விபரம் இதோ!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து மேலும் ஒரு இந்திய வீரர் விலகியுள்ளார்.இந்தியா வந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், கொல்கத்தாவில் துவங்கி நடைபெறவுள்ளது. போட்டிகள் 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்நிலையில், இத்தொடருக்கான அணியிலிருந்து கே.எல்.ராகுல், அக்சர் படேல் ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும், இவர்களுக்கான மாற்று வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா ஆகியோர் இருப்பார்கள் எனவும் தெரிவித்தது.
மற்றொருவர் விலகல்:
இந்நிலையில், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் காயம் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காயத்திற்கு சிகிச்சைபெற நாளை கொல்கத்தாவில் இருந்து பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு செல்லவுள்ளார். இங்கு மூன்று வாரங்கள் தங்கி சிகிச்சை பெறவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
நிர்வாகி பேட்டி:
இதுகுறித்து நமது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் Cricbuzz இணையதளத்திற்கு பேட்டிகொடுத்த தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய நிர்வாகியும், இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘‘சுந்தர், இந்திய அணி மருத்துவ பாதுகாப்பு வட்டத்தை விட்டுவெளியேறி கொல்கத்தாவில் தங்கியுள்ளார். சிகிச்சைக்காக நாளை பெங்களூர் செல்வார். மூன்று வாரங்கள்வரை அவர் சிகிச்சைபெறுவார் என தகவல் கிடைத்துள்ளது’’ எனக் கூறினார். டி20 தொடர் துவங்க இன்னும் 2 நாட்கள்
மட்டுமே இருப்பதால், மாற்று வீரரை அறிவிக்க முடியாத நெருக்கடியில் பிசிசிஐ இருக்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் வாஷிங்டன் சுந்தரை, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8.75 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய டி20 அணி:ரோஹித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னாய், யுஜ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா.
No comments:
Post a Comment