ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மாணவிகள் தேர்வை புறக்கணித்துள்ளனர்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து சென்று தேர்வு எழுத அனுமதிக்காததால் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மாணவிகள் பொதுத் தேர்வை புறக்கணித்துள்ளனர்.
கர்நாடக பள்ளி, கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவர்கள் சிலர் காவி துண்டு அணிந்து வகுப்புகளுக்கு சென்றனர்.
இதனால் கல்வி நிறுவனங்களை சில நாள்கள் பூட்டும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமானது. இதனால் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய க் கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில் ஹிஜாப் விவகாரத்தில் அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது
இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வரும் இஸ்லாமிய மாணவிகள் தேர்வு அறைக்கு ஹிஜாப் அணிந்து வர கூடாது; அவ்வாறு வரும் மாணவிகள் தேர்வு எழுத அனுமதிமதிக்கப்பட மாட்டார்கள் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. ஹிஜாப்பை காரணம் காட்டி தேர்வை புறக்கணிப்பவர்களுக்கு மறுதேர்வு எழுத அனுமதி இல்லை என்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஸ் கூறினார். இது இஸ்லாமிய மாணவிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 73 ஆயிரத்து 846 பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 732 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 21 ஆயிரத்து 110 பேர் மாணவிகள். 4 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். 3 ஆயிரத்து 444 தேர்வு மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற்றன.
ஹிஜாப் விவகாரம் காரணமாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையிலும் தேர்வுகள் நடந்த கல்வி நிறுவனங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
தேர்வு எழுத வந்த சில இஸ்லாமிய மாணவிகள் வீடுகளில் இருந்து வரும் போது ஹிஜாப் அணிந்து வந்தனர். தேர்வு மையங்களுக்குள் ஹிஜாப்பை எடுத்துவிட்டு சென்றனர். இது மாணவிகள் மத்தியில் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறுகிறார்கள்.
ஆனால் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பல இடங்களில் மாணவிகள் தேர்வுகளை புறக்கணித்துள்ளனர். 20 ஆயிரத்து 994 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment