போராட்டத்தில் இறங்கும் காங்கிரஸ்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, March 29, 2022

போராட்டத்தில் இறங்கும் காங்கிரஸ்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு!

பாஜக அரசுக்கு எதிராக பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

பாஜக அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி வருவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில மார்ச் 31ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாகக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத அரசாக பிரதமர் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உற்பத்தி முடக்கம் என பல்வேறு முனைகளில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் வறுமையின் பிடியில் மக்கள் சிக்கித் தவிக்கிற நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை கடந்த சில நாட்களாக மத்திய பாஜக அரசு கடுமையாக உயர்த்தியிருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 105.18 ஆகவும், டீசல் விலை ரூபாய் 95.33 ஆகவும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதாகக் காரணம் கூறப்படுகிறது.

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 108 டாலராக இருந்தது. எனினும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 71.41 ஆகவும், டீசல் விலை ரூபாய் 55.49 ஆகவும் இருந்தது. இதற்குக் காரணம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரி ரூபாய் 9.20 ஆகவும், டீசலுக்கு ரூபாய் 3.46 ஆகவும் இருந்தது தான். மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் கூட்டணி அரசு 2013-14 இல் ரூபாய் 1 லட்சத்து 47 ஆயிரத்து 25 கோடி மானியம் வழங்கியது. இதனால் தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக விற்கப்பட்டது.

கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான கலால் வரி கூடுதலாக லிட்டருக்கு ரூபாய் 18.70 ஆகவும், டீசலுக்கு ரூபாய் 18.34 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த கலால் வரி உயர்வு டீசலில் 531 சதவீதமாகவும், பெட்ரோலில் 203 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டிருப்பதால் மக்கள் மீளமுடியாத துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை உயர்த்தியதன் மூலம் ரூபாய் 26 லட்சம் கோடியை மோடி அரசு வருவாயாக பெருக்கிக் கொண்டது. இதன் காரணமாகத் தான் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு மக்கள் மீது சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் விலை ரூபாய் 29.02 ஆகவும், டீசல் விலை ரூபாய் 27.58 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
கரோனா தொற்று காலத்தில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் இத்தகைய விலை உயர்வை சர்வாதிகார ஆட்சி கூட செயல்படுத்தாது. மக்கள் நலனில் கடுகளவும் அக்கறை இல்லாத மோடி அரசு, தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 2014 ஆம் ஆண்டில் ரூபாய் 410 ஆக இருந்தது. இன்றைக்கு ஆயிரம் ரூபாயை எட்டியிருக்கிறது. மோடி ஆட்சியில் இதுவரை 540 ரூபாய் வரை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் தாய்மார்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

மத்திய பாஜக. அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி வருவதைக் கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மார்ச் 31 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பை வெளிப்படுத்த தங்கள் வீடுகளின் முன்பும், பொது இடங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், பெட்ரோல் கேன் போன்றவற்றிற்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏப்ரல் 2 முதல் 4 வரை மாவட்ட தலைநகரங்களில் பொது மக்களைத் திரட்டி பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பை மத்திய பாஜக அரசுக்கு உணர்த்துகிற வகையில் இப்போராட்டம் வெற்றிகரமாக அமைய பொதுமக்கள் ஆதரவைத் திரட்டுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய போராட்டங்களின் மூலமே மத்தியில் நடைபெற்று வரும் பாஜக அரசுக்கு உரிய பாடத்தை மக்களால் புகட்ட முடியும்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad