தமிழகத்தில் அரசு பணியாளர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்கள் சிகிச்சை பெற்ற நாட்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் அனைத்தும் சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளர் (பொறுப்பு) அகிலா தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வருகிறது.
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போதும், அரசு ஊழியர்கள் பொது மக்களுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளில் எந்த விதமான தடைகளை ஏற்படாத வண்ணம் பணியில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த சி.செந்தில்குமரன் என்பவர், அரசு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி மனு அனுப்பி இருந்தார்.
அந்த மனுவுக்கு பதில் அளித்த அரசின் மனிதவள மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளர் (பொறுப்பு) அகிலா, ஒரு அரசு ஊழியர் கொரோனா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் சிகிச்சை பெற்ற நாட்கள், தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முழுமைக்கும் மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுமுறையாக அனுமதிக்கப்படும். மேலும் நோய் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்தால் அதற்குரிய அறிவிப்பினை சமர்ப்பித்து, தடை செய்யப்பட்ட நாட்களை சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கலாம் என தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment