2024 இல் எதிர்கட்சிகள் இல்லாத பாரதம் அமைப்போம் என பாஜக மாநில தலைவர் அதீத நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் அமைச்சர் உள்பட 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் வெற்றி கொண்டாட்ட ஊர்வலம் நடத்தினர்.
அதன் பின்னர், புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசியது:
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி வாகை சூட உள்ளது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
பாஜகவின் இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில், புதுச்சேரி பாஜகவினர் அண்ணா சாலையில் இருந்து வெற்றி கொண்டாட்ட ஊர்வலம் நடத்தினர். பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக நிர்வாகிகள், மகளிர் அணியினர் என பலரும் அண்ணா சாலையில் இருந்து மிஷன் வீதி வரை மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வெற்றி ஊர்வலத்தை நடத்தினர்.
இதில் மகளிர் அணி சார்பில் பாரதமாதா வேடமணிந்து குதிரை மேல் அமர்ந்தும், பல்வேறு கலைஞர்கள் வண்ணப் பொடிகளைத் தூவியும் வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடினர்.
தொடர்ந்து பேசிய மாநில தலைவர் சாமிநாதன், 'வருகின்ற 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இல்லாத பாரதம் அமையும் என்றும், நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வாஷ் அவுட் ஆகியுள்ளது' எனவும் அவர் கூறினார்.
இதுநாள்வரை காங்கிரஸ் அல்லாத இந்தியா என்ற கோஷத்தை முன்வைத்து வந்த பாஜகவினர், தற்போது எதிர்க்கட்சிகள் இல்லாத பாரதம் என்ற கோஷத்தை முன்வைத்துள்ளது பல்வேறு தரப்பினர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment