தாலிக்கு தங்கம் திட்டம்: தெளிவுபடுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 20, 2022

தாலிக்கு தங்கம் திட்டம்: தெளிவுபடுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை!

தாலிக்குத் தங்கம், திருமண உதவித்தொகை திட்டம் தொடர்பாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை சுட்டிக்காட்டி அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்

தமிழ்நாட்டில் மொத்தம் 5 வகையான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. ஈ.வே.ரா. மணியம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அன்னை தெரசா, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் பெயரில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் அரசு பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் அவர்கள் படிப்பை முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 நிதியுதவி நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படும்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும்; அத்துடன் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், மற்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். நிதியுதவி பெறும் பயனாளியின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000க்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த திட்டம்தான் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, மாணவிகளுக்கு நிதி வழங்குவதற்காக, தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் அவர்கள் படிப்பை முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 நிதியுதவி நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படும்.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திருமண நிதியுதவித் திட்டங்களில் முக்கியமானது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம். மற்ற 4 திட்டங்கள் சிறப்புப் பிரிவினருக்கான திட்டங்கள் ஆகும். ஆனால், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் பொதுப்பிரிவினருக்கானது. இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதால், அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தமிழக அரசின் அறிவிப்புக்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

திமுக தனது தேர்தல் அறிக்கையில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் ரூ.50,000 என்பது ரூ.60,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியிருந்தது. ஆனால், தற்போது தாலிக்கு தங்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ள அதிமுகவினர் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த திட்டம் தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளித்துள்ள நிதித்துறை செயலாளர் முருகானந்தம், “மூவலுார் இராமாமிர்தம் நினைவு திருமண நிதியுதவி திட்டம், கலப்பு திருமண நிதியுதவி திட்டம் என, ஐந்து வகை திருமண நிதியுதவி திட்டங்கள் உள்ளன. அதில், தாலிக்கு தங்கம்வழங்கும் மூவலுார் இராமாமிர்தம் நிதியுதவி திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ஏழ்மை காரணமாக, அரசு பள்ளியில் பயிலும் மாணவியரில், 46 சதவீதம் பேர் தான் உயர்கல்விக்கு செல்கின்றனர். கல்வி தான் மிகவும் அவசியம். மூவலுார் இராமாமிர்தம் திட்டத்தில், பயனாளிகளை சரியாக தேர்வு செய்ய முடியவில்லை. இதை எல்லாம் கருத்தில் கொண்டு அத்திட்டம், உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால், அரசு பள்ளியில் பிளஸ் 2 பயின்று, உயர்கல்வியில் சேர்ந்து படிப்பை முடிக்கும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மற்ற நான்கு திருமண நிதியுதவி திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மூவலுார் இராமாமிர்தம் திட்டத்தில், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்குதான் திருமண நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால், மாற்றி அமைக்கப்பட்ட திட்டத்தால், ஆண்டுக்கு ஆறு லட்சம் பேர் பயனடைவர். இந்த ஆண்டில் இருந்து, அரசு பள்ளியில் இருந்து கல்லுாரிகளுக்கு சென்று முதல், இரண்டு, மூன்றாவது ஆண்டு படிக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், “ மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 தருவதன் மூலம் தங்கத்தை வைரமாக மாற்றுகிறோம். அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்கு தங்கத்தை சரியாக தரவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 4 ஆண்டு காலமாக தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்த திட்டத்திற்காக வாங்கிய தங்கத்தை என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை.” என்று குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல், இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகளும் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதனிடையே, இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த பயனாளிகளின் நிலை என்ன? அவர்களுக்கு ஏற்கனவே உள்ள சலுகைகள் கிடைக்குமா அல்லது அவர்களுக்கும் சேர்த்து தாலிக்கு தங்கம் ரத்து செய்யப்படுமா? அரசு பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை படித்து பட்டப்படிப்பையும் முடித்து இதுவரை திருமணம் ஆகாமால் இருக்கும் பெண்கள் விரைவில் திருமணம் செய்யும் நிலையில் உள்ளனர். அவர்கள் இந்த திட்டத்தின்கீழ், பயனடையலாம் என்றிருப்பர். அவர்களால் புதிய திட்டத்தின்படி, ரூ.1000த்தையும் பெற முடியாது. பழைய திட்டத்தின்படி, தாலிக்கு தங்கம், ரூ.50,000மும் கிடைக்காது என்றால் அவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவர். எனவே, இது தொடர்பான விளக்கத்தை தமிழக அரசு தெளிவாக அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், புதிய திட்டத்தின்படி, ரூ.1000த்துடன், திருமணத்தின் போது தாலிக்கு தங்கமும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad