ஈரோடு - பாலக்காடு, ஈரோடு - கோவை, சேலம் - கோவை இடையே இயக்கப்படும் மெமு(MEMU) பயணிகள் ரயில் சேவை ஏப்ரல் 1-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஈரோடு-கோவை மற்றும் ஈரோடு-பாலக்காடு, சேலம்-கோவை வரை இயக்கப்பட்ட மெமு எனப்படும் MEMU (Mainline Electric Multiple Unit) உள்ளூர் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதன் மூலம் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைக்கு செல்லும் பயணிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பயன்பட்டது.
ஈரோடு-கோவை (காலை7 மணி), ஈரோடு-பாலக்காடு (காலை 7.45) இரு பயணிகள் ரயில்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் ஈரோட்டில் இருந்து திருப்பூர் வரை உள்ள தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூர், விஜயமங்கலம், ஊத்துக்குளி, வஞ்சிப்பாளையம், சோமனூர்,சூலூர் ரோடு, இருகூர், பீளமேடு ஆகிய ரயில் நிலையத்தில் நின்று சென்றதால் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளிட்ட பயணிகள் பயன்பெற்று வந்தனர்.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ரயில்கள் 2020 ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டன.தொற்று குறைந்த பின்னர் விரைவு ரயில்கள் ஒவ்வொன்றாக இயக்கப்பட்ட போதும், இந்த MEMU ரயில்கள் இயக்கப்படவில்லை.மேலும், இந்த இரு ரயில்களை நம்பி குறைந்த கட்டணத்தில் தினமும் திருப்பூர் கோவைக்கு பணிகளுக்காக சென்று வந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்தனர்.
மேலும் இந்த ரயில்களை இயக்ககோரி இரயில்வே அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஈரோட்டில் இருந்து கோவைக்கு காலை 7.15 மணிக்கும், மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து ஈரோடிற்கு 6.40 மணிக்கும் ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக இரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, காலை 7.15 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்பும் ரயில் ( 06801) கோவைக்கு 9.45 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் திருப்பூருக்கு 8.15 மணிக்கு செல்லும். வழியில் உள்ள தொட்டிபாளையம், பெருந்துறை ஈங்கூர் விஜயமங்கலம் ஊத்துக்குளி உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.இதே போல் மறு மார்க்கத்தில் கோவையில் மாலை 6.40 க்கு கிளம்பும் ரயில்(06800) இரவு 9.15 க்கு ஈரோடு வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment