உத்தர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு சமாஜ்வாடி கட்சி முட்டுக்கட்டையாக இருந்தது என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆறு கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல், வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் இன்று, மிர்சாபூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:
கொரோனா சமயத்தில் உலகெங்கும் இந்தியர்கள் சிக்கி தவித்தனர். அவர்களை மீட்டு கொண்டு வர ‛வந்தே பாரத்' திட்டத்தை துவக்கினோம். இப்போது ‛ஆப்பரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை வெளியேற்றி, ஆயிரக்கணக்கான மக்களை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளோம். ஒவ்வொரு ஏழைக்கும் சொந்த வீடு வேண்டும் என்பதே எனது நோக்கம்.
சமாஜ்வாடி ஆட்சியில் மிர்சாபூரில் ஏழைகளுக்கு 800 வீடுகள் மட்டுமே கட்டிக் கொடுத்துள்ளனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் எங்கள் அரசு 28,000 வீடுகளை மிர்சாபூர் மக்களுக்கு கட்டிக் கொடுத்துள்ளது. குடும்பக் கட்சியான சமாஜ்வாடி ஆட்சியில் இருந்தபோது, உத்தர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் (மத்திய அரசு) எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதற்கு முட்டுக்கட்டை போட்டனர். இவர்கள் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரை வளர விடவில்லை.
இதைத் தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசியில், பிரதமர் நரேந்திர மோடி திறந்தவெளி வாகனத்தில் சென்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஏராளமான பாஜக தொண்டர்கள் அவருக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளித்தனர். முன்னதாக, வாரணாசியில் உள்ள மால்தாஹியா சௌக் பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
No comments:
Post a Comment