நான்கு பேரூராட்சிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணங்களை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நாகவள்ளி, பேளூர், காடையாம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர் தேர்தலுக்கான மறைமுக தேர்தலை தள்ளிவைத்ததை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்வான அதிமுக வார்டு உறுப்பினர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், 'சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இடங்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரின் உடல் நலக்குறைவு காரணமாக சில இடங்களில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சில இடங்களில் தேர்வான உறுப்பினர்கள் மாயம் என வந்த புகார்களில் காவல்துறை அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர்' அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இவ்விளக்கத்தை கேட்ட நீதிபதிகள், 'இந்த வழக்குகள் தொடர்புடைய பேரூராட்சிகளில் தேர்தல் ஏன் தள்ளுவைக்கப்பட்டது, எந்த தேதியில் தேர்தல் நடத்தப்படும் என விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஆய்வு செய்ய நேரிடும்' என எச்சரித்துள்ளனர். இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment