தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா காலத்தில் இயங்கிய சிறப்பு ரயில்கள் தற்போது படிப்படியாக சாதாரண ரயில்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் தொடக்கத்தில் 4 முறை இயக்கப்பட்டு வந்தது. கொரோனா நோய் பரவலால் நிறுத்தப்பட்ட அந்த ரயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் இயக்கப்பட்டது.
ஆனால் இந்த ரயில் நெல்லையில் இருந்து காலையில் ஒரு முறை, மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து மாலையில் நெல்லைக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து அந்த ரயிலை கூடுதலாக 2 முறை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இயக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
இன்று முதல் செங்கோட்டை-நெல்லை பயணிகள் சிறப்பு விரைவு ரயில் இயங்க உள்ளது. இந்த சிறப்பு விரைவு ரயிலானது தினமும் செங்கோட்டையில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு நெல்லைக்கு வந்து சேரும்.
இதன் பின்னர் மதியம் 2 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு செங்கோட்டைக்கு மாலை 4.15 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயிலானது நெல்லை டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாச முத்திரம் கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.
மறு அறிவிப்பு வரும் வரை இந்த சிறப்பு விரைவு ரயில் மற்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லாது. ஏற்கனவே காலை மற்றும் இரவு நேரத்தில் ஒரு முறை செல்கின்ற ரயில் மற்ற நிறுத்தங்களில் நின்று செல்லும்.
விரைவில் தூத்துக்குடி-திருச்செந்தூர் பயணிகள் ரயில் விரைவு ரயிலாக இயங்க உள்ளது. இவ்வாறு தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment