தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நாளை சந்திக்கவுள்ளார்
தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலின், சென்னை திரும்பிய கையோடு, மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்த அவர், டெல்லியில் கட்டப்பட்டு திறப்பதற்கு தயார் நிலையில் இருக்கும் திமுக அலுவலகமாக அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை ஏப்ரல் 2ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். இதனிடையே, ஏப்ரல் 1ஆம் தேதி சோனியா, ராகுல் ஆகியோரையும் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார்.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஸ்டாலின் நாளை சந்திக்கவுள்ளார். அவருடன் இணைந்து டெல்லி அரசுப் பள்ளிகள், மொஹல்லா கிளினிக்குகளை அவர் பார்வையிடவுள்ளார். டெல்லியில் ஆட்சியை பிடித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, கல்வி மற்றும் சுகாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை அளித்தது.
அதன்படி, தற்போது டெல்லியில் அரசு நடத்தும் பள்ளிகள் பாராட்டத்தக்க வகையிலான மாற்றங்களை கண்டுள்ளன. சிதிலமடைந்து கிடந்த டெல்லி அரசுப் பள்ளி வகுப்பறைகள் வண்ணமயமான சுவர்கள் மற்றும் வசதியான பெஞ்சுகளுடன் தூய்மையாக மாற்றப்பட்டுள்ளன. ப்ரொஜெக்டர், ஸ்மார்ட் போர்டுகள், ஏர் கண்டிஷன் ஆய்வகங்கள், விளையாட்டு வசதிகள் என வெளிநாட்டு பள்ளிகளுக்கு இணையாக மாற்றம் கண்டுள்ளன டெல்லி அரசு பள்ளிகள். சில பள்ளிகளில் லிஃப்ட் மற்றும் நீச்சல் குளங்கள் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு ஆடம்பர வசதிகள் பல தனியார் பள்ளிகளில் இல்லையென்று சொல்லும் வகையில் ஆம் ஆத்மி அரசு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அதேபோல், டெல்லியில் ‘மொஹல்லா கிளினிக்’ என்று அழைக்கப்படும் அருகமை மருத்துவமனைகளும் பிரபலம். மருந்துகள், நோயறிதல் மற்றும் ஆலோசனை உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதார சேவைகள் இந்த கிளினிக்குகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக, மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே சுகாதார சேவைகளை பெற முடியும் என்பது இந்த கிளினிக்குகளுக்கு கிடைத்த கூடுதல் வெற்றி. இந்த மொஹல்லா கிளினிக் மாடலை கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.
மக்கள் அடர்த்தி அதிகமுள்ள டெல்லி நகரத்தின் தேவையைத் தமிழகத்தோடு ஒப்பிட்டுவிட முடியாது என்றாலும் இத்திட்டம் வரவேற்கத்தக்கதாகவே பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, கல்வி சுகாதாரம் ஆகியவற்றில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையில் 2035ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை 50 சதவீதமாக ஆக உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், தற்போதே தமிழகம் அதனை கடந்து விட்டது.
ஆனாலும், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளை ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவாகவே உள்ளது. அதேபோல், தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே ஆரம்ப சுகாதார மையங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. அதிக அளவில் புறநோயாளிகள் வந்துசெல்லும் ஆரம்ப சுகாதார மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஊரக பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார மைய மாடலின் படியே மொஹல்லா கிளினிக்குகள் டெல்லியில் உருவாக்கப்பட்டன என்றால் அது மிகையாகாது. ஆனாலும், நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையிலும், குறைவான செலவிலும் தரமான சிகிச்சை அளிக்கும் வகையில் மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், 5 கி.மீ சுற்றளவில் ஒரு கிளினிக் என்ற ரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்ப சுகாதார மையங்கள் இதுபோன்று அருகருகே இருக்காது.
ஆம் ஆத்மி அரசின் இந்த டெல்லி மாடல், பஞ்சாபில் அக்கட்சி ஆட்சியை பிடிக்க முக்கியமான காரணமாக இருந்தது. இந்த நிலையில், டெல்லி பயணத்தின்போது, டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள், மொஹல்லா கிளினிக்குகளை பார்வையிட்டு, அதிலிருக்கும் சிறப்பம்சங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஸ்டாலின் முடிவெடுப்பார் என்கிறார்கள் திமுகவினர்.
No comments:
Post a Comment