பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியுற்றால் ஷபாஸ் ஷெரீப் பிரதமராவார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தோல்வி அடைந்தால் உடனடியாக இடைக்கால அரசு அமைக்க எதிர்க்கட்சிகள் ஆயத்தமாக உள்ளன. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் தலைமையில் இடைக்கால அரசு அமையும் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ் ஷெரீப்) கட்சியின் தலைவராக இருக்கிறார் ஷபாஸ் ஷெரீப். இவர்தான் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர். மேலும் இவரது தலைமையில்தான் தற்போது எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ வயதில் இளையவர் என்பதால் ஷபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் பதவியைக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஷபாஸ் ஷெரீப்பை பிரதமராக்கும் திட்டத்தை அறிவித்தவரும் பிலாவல் பூட்டோதான். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை இழந்து விட்டார். இனியும் அவரை பிரதமராக கருத முடியாது. நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளது. உடனடியாக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட வேண்டும். அதன் பிறகு ஒளிவுமறைவற்ற தேர்தலைநடத்த வேண்டும். ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடியும் முடிவுக்கு வர வேண்டும். நாட்டின் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் விரைவில் பொறுப்பேற்பார் என்றார் பிலாவல் பூட்டோ. இவர் மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகன் ஆவார்.
ஷபாஸ் ஷெரீப்பின் அண்ணன் நவாஸ் ஷெரீப் 2 ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர். ஆனால் லண்டனுக்குத் தப்பிப் போய் அங்கு வசித்து வருகிறார். இதனால் அவருக்குப் பதில் ஷபாஸ் ஷெரீப் கட்சித் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
ஷபாஸ் ஷெரீப் ஏற்கனவே பஞ்சாப் மாகாண முதல்வராக பதவி வகித்துள்ளார். பாகிஸ்தான் முதல்வர்களிலேயே அதிக காலம் முதல்வர் பதவியை வகித்த பெருமைக்குரியவர். பஞ்சாப் மாகாண முதல்வராக 3 முறை அவர் வெற்றி பெற்று செயல்பட்டுள்ளார். 1997ம் ஆண்டு முதல் முறையாக அவர் முதல்வரானார். பின்னர் 1999ம் ஆண்டு முஷாரப் ராணுவப் புரட்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தானை விட்டு தப்பினார். எட்டு ஆண்டுகள் சவூதியில் வசித்து வந்தார்.
2007ம் ஆண்டு அவரும், நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தான் திரும்பினர். பஞ்சாப் மாகாண முதல்வராக மீண்டும் ஷபாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார். அவரது 3வது பதவிக்காலம் 2013ல் தொடங்கியது. முழுமையான 5 ஆண்டு காலம் அவர் பதவி வகித்தார். பின்னர் 2018ம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. 2019ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு இவரது 23 சொத்துக்களை முடக்கியது. பண மோசடி வழக்கிலும் இவர் சிக்கினார். இவர் 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் 2021ம் ஆண்டு இவர் ஜாமீனில் விடுதலையானார். தற்போது பிரதமர் பதவிக்கு இவரது பெயர் அடிபடுகிறது.
இது அரசியல்வாதிகளின் கணக்கு. இம்ரான் கான் பதவி இழந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதை அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அதேசமயம், ராணுவத்தின் கணக்கு என்ன என்பது தெரியவில்லை. அதுதான் பாகிஸ்தானின் தலையெழுத்தை உண்மையாக நிர்ணயிக்கும் என்பதால் அந்தக் கணக்கை அறிய உலகமே காத்திருக்கிறது.
No comments:
Post a Comment