அரசியல் கட்சிகள் திடீரென காட்டிய அதிரடியால் கலெக்டர் செம டென்ஷனில் உள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நுண் அறிவியல் துறைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை நுட்பமாக கலர் கலர் கட்சிக் கொடிகளை கீற்றுக் கொட்டகைகளில் சொறுகி திருவாரூர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த ஆக்கிரமிப்பாளர்கள்
திருவாரூர் மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு உள்ளிட்ட அரசு இடங்களை யாரும் ஆக்கிரமிக்க கூடாது. அவ்வாறு ஆக்கிரமித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அகற்றப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட விளமல் பகுதியில் திருவாரூர்-தஞ்சாவூர் பிரதான சாலையின் அருகே விளமல் தியாகராய நகர் பகுதியில் விளமல் அரசு பள்ளிக்கு பின்புறமுள்ள அரசு புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தார்கள்.
இதனை தொடர்ந்து பலமுறை மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்ற சொல்லி வலியுறுத்தியும் ஆக்கிரமிப்பு அகற்ற படாததால் இன்று பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
அதைப் போலவே அதன் அருகில் சுமார் 10க்கும் மேற்பட்ட கொட்டகைகள் திடீரென்று புதிதாக கீற்று போடப்பட்டு இருந்தன. அந்த கொட்டகைகளில் யாரும் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கூட இல்லை.
அப்படி இருக்கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி, கம்யூனிஸ்டு கட்சி கொடி ஆகியவற்றை கொட்டகையின் மேல் பறக்க விட்டு, ‘எங்களை இங்கிருந்து அகற்றாதீர்கள். மீறி அகற்றினால் நாங்கள் போராடுவோம்’ என்று அந்த ஆக்கிரமிப்பாளர்கள் காவல் துறை மற்றும் வருவாய் துறையினரிடம் மல்லுக்கட்டினார்கள்.
அதன் பிறகு வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர், ‘இது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம். நீங்கள் தவறாக இங்கு வந்து ஆக்கிரமித்து உள்ளீர்கள். உடனடியாக வெளியேறுங்கள். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்தனர்.
அதன் பிறகு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி கொட்டகையை பிரித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்கள். இந்த இடமானது திருவாரூர் மாவட்டத்தில் அமைய உள்ள மத்திய அரசின் நுண்அறிவியல் துறைக்கு ஒதுக்கப்பட்ட இடமாகும்.
அந்த இடத்தை சிலர் கட்சி கொடிகளை கொட்டகைகளில் ஏற்றி நுட்பமாக பறிக்க முயன்றது அங்கு இருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்போது வட்டாட்சியர் வருவாய்த் துறையினர் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள்.
No comments:
Post a Comment