கோர்ட் உத்தரவால் தப்பிய அரசு மருத்துவர் சுப்பையா வேலை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 31, 2022

கோர்ட் உத்தரவால் தப்பிய அரசு மருத்துவர் சுப்பையா வேலை!

அரசியல் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறி டாக்டர் சுப்பையாவை சஸ்பெண்ட் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா நேரில் சென்று சந்தித்தார்.

மருத்துவர் சுப்பையாவின் செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டி, சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறை செயலாளர் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.

இவற்றை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் கடந்த 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, சுப்பையா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மனுதாரர் ஏபிவிபி எனும் மாணவர் சங்கத்தின் தலைவராக 2017 முதல் 2020 வரை பதவி வகித்துள்ளதாகவும், இந்த இயக்கம் அரசியல் அமைப்பு அல்ல எனவும் வாதிட்டார்.
மேலும், சுப்பையா எந்த விதமான அரசியல் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும், சஸ்பெண்ட் உத்தரவுக்கான காரணங்களை கூறும் ஆதாரங்களை வெளியிட வேண்டும் எனவும் வாதிட்டார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் அரசியல் கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் சுப்பையா பதிவு செய்துள்ளார் என தெரிவித்தார்.

மேலும், ஏபிவிபி ஒரு அரசியல் சார்ந்த அமைப்புதான் எனவும் துறைரீதியான விசாரணை நடந்து வருவதாகவும், அதனை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் விளக்கமளித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி கிருஷ்ணகுமார் பிறப்பித்துள்ள தீர்ப்பில், சுப்பையா பணியிடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் அவருக்கு எதிரான துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க வேண்டுமென அரசுக்கும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென மருத்துவர் சுப்பையாவுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad