உக்ரைனின் நிப்ரோ நகர மக்கள் ரஷ்ய படையினரை எதிர்கொள்ள வித்தியாசமான ஆயுதங்களுடன் தயார் நிலையில் உள்ளனராம்.
உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் கொஞ்சம் கூட குறையவில்லை. சிறு நகரங்களை படிப்படியாக பிடித்து வருகிறது ரஷ்ய ராணுவம். அதேசமயம், பெரிய நகரங்களையும் தற்போது பிடிக்கத் தொடங்கியுள்ளது. முக்கியமான வர்த்தக , துறைமுக நகரமான கெர்சானை ரஷ்யப் படைகள் பிடித்து விட்டன.
இந்த நிலையில் இன்னொரு முக்கிய தொழில் நகரான நிப்ரோ நகருக்கு ரஷ்யப் படைகள் குறி வைத்துள்ளன. நீப்பர் ஆற்றின் மேற்குக் கரையில் இந்த நகரம் உள்ளது. கிழக்கு மற்றும் மத்திய உக்ரைனைப் பிரிக்கும் ஆறுதான் நீப்பர். இந்த ஆற்றங்கரையோர நகரைப் பிடிக்க தற்போது ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன.
கீவ், கார்கிவ் போன்ற நகரங்களில் நடப்பது போன்ற அதி தீவிர தாக்குதல்கள் இந்த நகரை இன்னும் எட்டிப் பார்க்கவில்லை. ஆனால் ரஷ்யப் படைகள் விரைவில் இந்த நகருக்குள் ஊடுறுவலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதையடுத்து இளைஞர்கள் அடங்கிய சிறு சிறு மக்கள் படைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ராணுவத்திற்கு துணையாக இவர்களை தயார்படுத்தி வருகிறார்கள்.
ஆண்கள் மட்டும் அல்லாமல் பெண்களும் இந்தப் படையில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக சிறு சிறு போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கையாளப் போகும் முக்கிய ஆயுதமே பெட்ரோல் குண்டுகள்தான். பெட்ரோல் குண்டுகளை எப்படி தயார்படுத்துவது, அதை எப்படி பயன்படுத்துவது என்று இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மறைவிடங்களிலிருந்து ரஷ்ய டாங்கிகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீச இவர்களுக்குப் பயிற்சி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்ய டாங்கிகளை செயலிழக்க வைக்கலாம் என்பது உக்ரைன் அரசின் திட்டமாகும். இதுதவிர ஆங்காங்கே கட்டடங்களில் மணல் மூட்டைகளையும் அடுக்கி வைத்து வருகின்றனர்.
சிறு சிறு பொருட்களை வைத்து எப்படியெல்லாம் ரஷ்ய ராணுவத்துக்கு பாதிப்பைக் கொடுக்கலாம் என்று இவர்கள் யோசித்து யோசித்து அதில் பயிற்சி பெற்று தயார் நிலையில் உள்ளனராம். இதுதவிர, ரஷ்ய தாக்குதலின்போது தேவைப்படும் மனிதாபிமான உதவிகளைச் செய்யும் வகையிலும் இவர்களுக்குப் பயிற்சி தரப்பட்டுள்ளதாம். உணவு சப்ளை, மருந்துகள் கொடுப்பது, முதலுதவி உள்ளிட்டவை செய்வது தொடர்பாகவும் இவர்களுக்குப் பயிற்சி தரப்பட்டுள்ளது.
600 வாலன்டியர்கள், 20 ஒருங்கிணைப்பாளர்களுடன் இந்தக் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். ராணுவ சீருடைகள், படுக்கைகள், போர்வைகள், ஜமக்காளங்கள், ஆடைகள் தங்களுக்குத் தேவைப்படுவதாகவும் இந்த குழுவின் இணை நிறுவனர்களில் ஒருவரான யூலியா டிமிட்ரோவா கூறியுள்ளார்.
தற்போது நிப்ரோ நகரில் பெருமளவில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் மருத்துவமனகள், ஹோட்டல்கள், நர்சரிப் பள்ளிகள், கடைகள் உள்ளிட்டவற்றில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நகரில் கிட்டத்தட்ட 10.5 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இந்த நகர், ரஷ்ய எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment