உக்ரைன் மீதான ரஷ்யப் போரை நிறுத்த தலைமை நீதிபதி என்ன செய்கிறார் என்று சமூக வலைதளங்களில் கேட்கிறார்கள். நான் வேண்டும் என்றால் போரை நிறுத்துமாறு புடினிடம் போய் சொல்லட்டுமா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேட்டுள்ளார்.
உக்ரைன் எல்லைப் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதின்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில், சமூக வலைதளத்தில் ஒரு போஸ்ட் பார்த்தேன். அதில், தலைமை நீதிபதி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டு ஒருவர் வீடியோ போட்டுள்ளார். அதிபர் புடினிடம் போரை நிறுத்துமாறு நான் போய் கேட்கட்டுமா? இல்லை, அவருக்கு என்னால் உத்தரவு ஏதேனும் பிறப்பிக்க முடியுமா?.
அனைவர் மீதும் நாங்கள் அனுதாபத்துடன் உள்ளோம். ஆனால் கோர்ட் என்ன செய்ய முடியும்.? மனுதாரரின் வழக்கறிஞர் சமர்ப்பித்துள்ள அனைத்தையும் நாங்கள் பதிவு செய்து கொள்கிறோம். அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ருமேனியா எல்லைப் பகுதியில் சிக்கித் தவிக்கும் 200க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், போலந்து, ஹங்கேரியிலிருந்து மட்டுமே இந்திய விமானங்கள் இயக்கப்படுகின்றன. ருமேனியாவிலிருந்து எந்த விமானமும் இயக்கப்படவில்லை. ஆனால் ருமேனியா எல்லைப் பகுதியில் மாணவிகள் உள்ளிட்ட மாணவர்கள் தவித்து வருகின்றனர். அவர்களில் பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர் என்றார்.
உக்ரைன் போர் முனையில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் உக்ரைனுக்குள் போய் யாரையும் மீட்க முடியவில்லை. போர் முற்றியுள்ளதால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரிக்கு இந்திய மாணவர்களை வரவைத்து அங்கிருந்து அவர்களை மீட்டு தாயகம் கொண்டு வருகிறார்கள். இதில் இந்திய விமானப்படை விமானங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 8000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இன்னும் உக்ரைனில் சிக்கியிருப்பதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் சிரிங்லா கூறியுள்ளார். இந்திய அமைச்சர்கள் குழு ஒன்றும் மேற்கண்ட நாடுகளில் முகாமிட்டு மீட்புப் பணிகளை பார்வையிட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment