உக்ரைன் -ரஷியா போர் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது .தலைநகர் கீவ், இரண்டாம் நிலை நகரம் கார்கிவ் என ஒவ்வொரு இலக்காக குறிவைத்து ரஷிய படைகள் அதிரடியாக முன்னேறி வருகின்றன.
இந்த நிலையில், ரஷிய ராணுவத்தின் குண்டுவீச்சு தாக்குதலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மருத்தவ மாணவர் நவீன் நேற்று முன்தினம் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து கார்கிவ் நகரில் தங்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. உக்ரைனின் எல்லை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் சுலோவாகியா வந்தடையும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
உக்ரைனின் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்திய மாணவர்கள் பேருந்துகள் மூலம் எல்லை நாடுகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்தப் பணியை இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் சிலர் தென்னிந்திய மாணவர்களை, குறிப்பாக தமிழக மாணவர்களை பேருந்தில் ஏற்றுவதில் பாரபட்சம் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது அவர்கள் வட இந்திய மாணவர்களை மீட்பதற்கே முன்னுரிமை அளிப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இதனையடுத்து, உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணிகளை இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ள வசதியாக, தமிழக எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த குழுவில் திமுக எம்பி திருச்சி சிவா, எம்எல்ஏ டிஆர்பி ராஜா, கலாநிதி வீராசாமி, எம்.எம். அப்துல்லா மற்றும் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, ஹங்கேரி, ருமேனியா, போலந்து, சுலோவாக்கி ஆகிய நாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் இணைந்து தமிழக மாணவர்களை தாயகம் திரும்ப அழைத்து வரும் பணியை மேற்கொள்வார்கள் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயர் கல்வி, பணிநிமித்தம் போன்ற காரணங்களுக்காக உக்ரைனில் தமிழர்கள் 5,000 பேர் உட்பட மொத்தம் 20 ஆயிரம் இந்தியர்கள் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment