தேர்தலில் பாடம் கற்று நாட்டு மக்களின் நலனுக்காக உழைப்போம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பஞ்சாபில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. மீதம் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்தது.
இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே உத்தரப் பிரதேசத்தில் பாஜக பலமாக முன்னிலையில் இருந்தது. உ.பியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்து யோகி ஆதித்யநாத் முதல்வராக நீடிக்கவுள்ளார்.
உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களையும் பாஜக தக்கவைத்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய மாநிலம் பஞ்சாப்தான். ஏனெனில், பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. மேலும் பாஜக மிகவும் பலவீனமாக உள்ளது.
இந்த முறை பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நீடிப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருந்தது. ஆனால், பஞ்சாப் காங்கிரஸில் நடந்த குழப்பங்களால் பொதுமக்களே கடுப்பாகிவிட்டனர் என்பதுதான் யதார்த்தம். இந்த வாய்ப்பை பயன்படுத்த ஆம் ஆத்மி முயற்சித்தது.
எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளோ ஆம் ஆத்மி வெற்றிபெறும் என்று கூறின. இந்நிலையில் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது; ஆம் ஆத்மி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமாக பார்த்தால், ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம். வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துகள். காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இதில் இருந்து பாடம் கற்று இந்திய மக்களின் நலனுக்காக உழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment