"கட்சியை சசிகலா வழிநடத்த வேண்டும்" என, தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் சொந்த வார்டுகளிலேயே, அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பிறகு, அதிமுகவில், மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. தலைமை இல்லாததாலேயே தேர்தலில் தோல்வி அடைந்ததாக அதிமுகவினர் புலம்பி வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு வந்திருந்த வி.கே.சசிகலாவை சந்தித்து பேசினார். இந்த விவகாரம் அதிமுகவில் மீண்டும் புயலைக் கிளப்பியதை அடுத்து, கட்சியில் இருந்து, ஓ.ராஜா உள்ளிட்ட சிலரை நீக்கி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த ஓ.ராஜா, "அதிமுகவுக்கு தலைமையேற்று சசிகலா வழிநடத்த வேண்டும் என்றும், என்னை கட்சியில் இருந்து நீக்க ஓபிஎஸ் - இபிஎஸ் யார் என்றும், எங்களைப் பொறுத்தவரை, சசிகலா தான் பொதுச் செயலாளர்" என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் தரவைகுளத்தில், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக தலைமையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவை சசிகலா வழிநடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட மற்றும் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சசிகலாவுக்கு ஆதரவாக நாளுக்கு நாள் குரல் எழுந்து வருவதால், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment