திமுக அரசின் பட்ஜெட் குறித்து டி.ஜெயக்குமார் கருத்துத் தெரிவித்துள்ளார்
உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மட்டும் உதவித் தொகையா? மாணவர்கள் என்ன பாவம் செய்தனர்? என, தமிழக அரசுக்கு, அதிமுக முன்னாள் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதித் துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், 2022 - 2023 ஆம் நிதி ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு திமுக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளன. அதே சமயம் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து உள்ளன.
இந்நிலையில் இன்று, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் அறிவிப்பில், மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி குறித்து, நிதி அமைச்சர், உள்ளாட்சி தேர்தலின் போது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். தேர்தல் தான் முடிந்து விட்டதே, தற்போது பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டியது தானே? ஏன் அறிவிக்கவில்லை? அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. புதிய திட்டங்கள் எதுவும் இல்லை.
தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு மக்களை ஏமாற்றக்கூடிய பட்ஜெட்டாக உள்ளது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்க அறிவிப்பு வெளியாகும் என இல்லத்தரசிகள் எதிர்பார்த்தனர்; ஆனால் அது நடக்கவில்லை. ஒவ்வொரு துறைக்கும் வழக்கமான நிதி ஒதுக்கீடு தான் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் புதிய திட்டம் என்ன? உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என அறிவித்துள்ளனர். ஆனால் அதில் பயனடைய என்ன விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளது என தெரியவில்லை. அதற்கான அரசாணை வெளியிடும் போது தான் தெரிய வரும்.
மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் கொடுக்கிறீர்கள்... மாணவர்கள் என்ன செய்தனர். அதிமுக ஆட்சி காலத்தில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு இருபாலருக்கும் தான் வழங்கப்பட்டது. மாணவிகளுக்கு மட்டும் தான் என அறிவிக்கப்பட்டதா? இதில் ஏன் பாகுபாடு காட்டுகிறீர்கள்? மாணவர்கள் என்ன பாவம் செய்தனர்? மக்களை ஏமாற்றும் திட்டமாகத்தான் இது உள்ளது.
இவ்வாறு அவர் விமர்சனம் செய்தார்.
No comments:
Post a Comment