பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான இந்தியாவின் செலவு கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து மந்தமாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான எல்லைப் பிரச்சினை இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே பட்ஜெட்டில் இந்திய பாதுகாப்பு துறைக்கான நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2020-21ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ.4,78,195.62 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 2021-22ஆம் ஆண்டில் ரூ.4.71 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2022-23ஆம் நிதியாண்டில் பாதுக்காப்புத்துறைக்கு சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு ரூ.5,25,166,15 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பெருந்தொழில்துறையினர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவதுடன் இந்நிறுவனத்தின் பட்ஜெட்டில் 25 சதவீதம் இதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2014-2019ஆம் ஆண்டு வரை சீனா தனது பாதுகாப்புத்துறைக்கு 261.1 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், 2014-2019ஆம் ஆண்டு வரை இந்தியா தனது பாதுகாப்புத்துறைக்கு 71.1 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஒதுக்கீசு செய்துள்ளது. இதே கால கட்டத்தில் பாகிஸ்தான் 10.3 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான இந்தியாவின் செலவு குறித்து கவலை தெரிவித்துள்ள பாதுகாப்பு நிலைக்குழு, இந்தியாவுக்கான அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் போதும், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை விட இந்தியா செலவு செய்யும் தொகை மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான இந்தியாவின் செலவு கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து மந்தமாகவே உள்ளது எனவும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே செலவிடப்படுவதாகவும் பாதுகாப்பு நிலைக்குழு தெரிவித்துள்ளது. 2016-17ல் 0.088 சதவீதமாக இருந்த அந்த தொகை, 2020-21இல் 0.083 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கான மானியங்களுக்கான கோரிக்கைகள் குறித்த நிலைக்குழு அறிக்கையின் ஒரு பகுதியாக மேற்கண்ட அறிக்கை அமைந்துள்ளது. மொத்தப் பாதுகாப்புச் செலவினங்களுடன் ஒப்பிடுகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினங்களை ஆய்வு செய்ததில், இது சீனா போன்ற வளர்ந்த நாடுகளை விட மிகக் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக சீனா 20 சதவீதம், அமெரிக்கா 12 சதவீதம் ஒதுக்கீடு செய்கையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே செலவிடுகிறது.
இந்தியாவுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு போதுமான நிதி வழங்கப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. அப்படி ஒதுக்கீடு செய்தால், மூலோபாய திட்டங்களை முழு வீச்சுடன் செயல்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment