டாக்டர் சுப்பையா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
அரசியல் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து டாக்டர் சுப்பையா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பான ஏவிவிபி -யை சேர்ந்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டதில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா சிறைக்கு சென்று சந்தித்தார்.
மருத்துவர் சுப்பையாவின் செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டி, சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் பிப்ரவரி 17ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, சுப்பையா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மனுதாரர் ஏபிவிபி எனும் மாணவர் சங்கத்தின் தலைவராக 2017 முதல் 2020 வரை பதவி வகித்துள்ளதாகவும், இந்த இயக்கம் அரசியல் அமைப்பு அல்ல எனவும் வாதிட்டார்.
மேலும், சுப்பையா எந்த விதமான அரசியல் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும், சஸ்பெண்ட் உத்தரவுக்கான காரணங்களை கூறும் ஆதாரங்களை வெளியிட வேண்டும் எனவும் வாதிட்டார்.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் அரசியல் கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் சுப்பையா பதிவு செய்துள்ளார் என தெரிவித்தார்.
மேலும், ஏபிவிபி ஒரு அரசியல் சார்ந்த அமைப்பு தான் எனவும் துறைரீதியான விசாரணை நடந்து வருவதாகவும், அதனை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் விளக்கமளித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், டாக்டர் சுப்பையாவின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment