பள்ளி மாணவர்களுக்கு புதிய சிக்கல் வந்துள்ள நிலையில் கி.வீரமணி வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலை கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக இந்த கல்வி ஆண்டு முதல் கட்டாய பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானிய குழுவின் இந்த அறிவிப்பு மாணவர்களின் மீது ஒன்றிய அரசு தொடுத்து இருக்கும் அடுத்த கட்ட தாக்குதல் ஆகும். மூன்றரை மணி நேரம் நடக்க உள்ள இந்த தேர்வில் உள்ள அனைத்து கேள்விகளும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேட்கப்படும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மாணவர்கள் என்சிஇஆர்டி பாட நூல்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கும் யூஜிசி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு வெயிட்டேஜ் மத்திய பல்கலை கழகங்களுக்கான மாணவர் சேர்க்கையில் வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது.
இது மீண்டும் குலக்கல்வியை கொண்டு வரும் திட்டத்தின் புது அவதாரம் ஆகும். மாநில பள்ளிகளில் படித்த கல்வியை மதிப்பிழக்க செய்து பிளஸ் 2 வகுப்பில் பெறும் பொதுத்தேர்வு மதிப்பெண்களை மதிப்பற்ற எண்களாக்கும் இந்த போக்கு கல்வி துறை, சமூகநீதியின் அடி வேரை வெட்டுவது ஆகும்.
மேலும், கார்ப்பரேட் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவும், ஏழை, எளிய மக்களை உயர் கல்வியில் இருந்து துரத்தி அடிக்கவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் முயற்சி ஆகும்.
இந்த தேர்வை பிற கல்லூரிகளும், தனியார் பல்கலை கழகங்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு இந்த நுழைவு தேர்வை அனைத்து கல்லூரிகளுக்கும் விரிவாக்கும் சதி திட்டத்தின் ஒரு முனையே ஆகும்.
இதை தொடக்கத்திலேயே ஒழித்து கட்ட வேண்டியது அவசியமாகும். மருத்துவ கல்விக்கு ‘நீட்’ என்னும் தடை சுவரை எழுப்பியுள்ளது போன்று கல்லூரி கல்விக்கு இந்த சியுஇடி நுழைவுத்தேர்வு பெருந்தடையாக அமையும்.
மேலும் முனைவர் பட்டம் ஆய்வு மாணவர்களை தேர்வு செய்யும் உரிமையை கூட மாநிலத்தில் உள்ள பல்கலை கழகங்களிடம் இருந்து பறிக்கும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இப்படி பல்முனை தாக்குதலை தொடுத்திருக்கும் வேளையில் அதற்கெதிராக வரும் 31ம் தேதி மத்திய பல்கலை கழகம் அமைந்துள்ள திருவாரூரில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட, மண்டல கழக பொறுப்பாளர்கள், மாணவர் கழக பொறுப்பாளர்கள் முன்னின்று, வெற்றிகரமாக நடத்த வேண்டுகிறேன். மீண்டும் மனுதர்ம ராஜ்யத்தை நடத்தி, நமது கல்வி கண்களை ஆரியமும், ஆர்எஸ்எஸ்சும் குத்த வருகின்றன. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment